தன்னிடம் படிக்கும் மாணவர்கள் எல்லா துறையிலும் உயர்ந்த நிலைக்கு வரவேண்டும் என்று ஆசைப்படுபவர் ஆசிரியர்
தன்னிடம் பயிலும் மாணவர்கள் எல்லாத் துறையிலும் உயர்ந்த நிலைக்கு வர வேண்டும் என நினைப்பவர்கள் ஆசிரியர்கள் : அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் பேச்சு.
புதுக்கோட்டை,மே.14: தன்னிடம் பயிலும் மாணவர்கள் எல்லாத் துறையிலும் உயர்ந்த நிலைக்கு வர வேண்டும் என நினைப்பவர்கள் ஆசிரியர்கள் மட்டும் தான் என அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் பேசினார்.
புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் ஒன்றியம் குப்பக்குடி அரசு உதவி பெறும் ஆரம்பப் பள்ளியில் பனையாண்டி அம்மாள் ரா.மா.வே.நினைவு அரங்கில் கணினி ஆய்வகம் மற்றும் திறன் மேம்பாட்டு வகுப்பறை திறப்பு விழா நடைபெற்றது.
விழாவில் சுற்றுச் சூழல் – காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் பேசியதாவது:குப்பக்குடி பள்ளியின் வரலாறு ஆச்சர்யமாக உள்ளது.1950 இல் தொடங்கப்பட்ட ஒரு பழமையான பள்ளியாக உள்ளது.தொடக்க வகுப்பு மாணவர்கள் சிறு வயதில் கணினி வழியில் உற்சாகமாக படிப்பதை பார்க்கும் பொழுது மகிழ்வாக உள்ளது.ஆசிரியர்கள் மட்டும் தான் தன்னிடம் பயிலும் மாணவர்கள் எல்லாத் துறையிலும் உயர்ந்த நிலைக்கு வர வேண்டும் என நினைப்பவர்கள்..ஒரு பொறியாளரால் இன்னொரு பொறியாளரை உருவாக்க முடியும்,ஒரு மருத்துவரால் இன்னொரு மருத்துவரை உருவாக்க முடியும்.ஆனால் ஆசிரியர்களால் மட்டும் தான் தன்னுடைய மாணவர்களை அனைத்து துறையிலும் சிறந்தவர்களாக உருவாக்க முடியும்.அசிரியர்கள் தன்னுடைய மாணவர்கள் ஒழுக்கம் தவறாத மனிதனாக சமூகத்தில் கட்டுப்பாடுடன் வாழ்வதற்கும் ,நாட்டுப்பற்று மிக்கவராகவும் வாழ்வதற்கும் காரணமாக உள்ளார்கள். வாழ்க்கையில் பெற்றோர்கள் செய்ய வேண்டிய கடமை குழந்தைகளை அறிவுசார்ந்த கல்வியாளர்களாக மாற்ற வேண்டும்.இந்தியாவில் பல்வேறு மாநிலங்கள் இருந்தாலும் தமிழகம் கல்வியறிவில் உயர்கல்வியில் சிறந்து விளங்க காரணம் பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் சிந்தனை தான்.பேரறிஞர் அண்ணா,முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆகியோர் பிற்படுத்தப்பட்ட,தாழ்த்தப்பட்ட ஒடுக்ப்பட்ட மக்களுக்கு முதல் வகுப்பு முதுகலை வகுப்பு இலவச கல்வி கொடுக்க காரணமாக இருந்தார்கள்.அவர்கள் கொடுத்த கல்வியில் தான் நாம் எல்லோரும் இன்று இந்த நிலைக்கு வந்துள்ளோம்.அதே போல் தமிழக முதல்வர் அவர்கள் எல்லோருக்கும் எல்லாம் என்ற தத்துவத்தின் அடிப்படையில் பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார் என்றார்.
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி பேசியதாவது; ஆசிரியர்களை பொதுமக்கள் ஏற்றுக் கொண்டாலே பள்ளி வளம் பெறும்.பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை உள்ளூரில் உள்ள அரசுப் பள்ளியில் மாணவர்களை சேருங்கள்.நானும் அரசுப் பள்ளியில் சேர்ந்து தான் இன்று இந்த நிலைக்கு உயர்ந்துள்ளேன்.நாம் கற்ற கல்வியானது எக்காலத்திலும் அழியாது.கல்வி மட்டும் தான் நம்மைக் காக்கும் கருவி.குழந்தைகளிடம் பெற்றோர்கள் செல்போனை கொடுக்காதீர்கள்.2 வருடம் இழந்த கல்வியை சரி செய்ய உங்கள் குழந்தைகளை மாலை நேரங்களில் இல்லம் தேடி கல்வி மையத்திற்கு அனுப்பி வையுங்கள்.மாணவர்களுக்கு பெற்றோர்கள் நல்ல பழக்க வழக்கத்தை கற்றுக் கொடுங்கள்.மாணவர்களுக்கு மன அழுத்தத்தை பெற்றோர்கள் கொடு்க்க கூடாது.மாணவர்கள் தன் தாய் தந்தையரை வயதான காலத்தில் நன்றாக கவனித்துக் கொள்ள வேண்டும்.பெற்றோர்கள் குழந்தைகளுக்கு சத்தான உணவு கொடுக்க வேண்டும்.குழந்தைகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.குழந்தைகளை சீர்படுத்த வேண்டும்.குழந்தைகள் மேல் அன்பு செலுத்த வேண்டும்.குழந்தைகளிடம் உறவுமுறைகளை கற்றுக் கொடுக்க வேண்டும்.அப்பொழுது தான் குழந்தைகள் நல்லவர்களாக வளர்வார்கள் என்றார்.
விழாவில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் ஜி.கருப்பசாமி,திருவரங்குளம் ஒன்றிய பெருந்தலைவர் வள்ளியம்மை தங்கமணி,திமுக ஒன்றியச் செயலாளர் கே.பி.கே.டி.தங்கமணி,பள்ளிச் செயலாளர் மற்றும் குப்பக்குடி ஊராட்சி மன்றத்தலைவர் இளங்கோ,ஊர்க்கமிட்டித்தலைவர் வழக்கறிஞர் பரமசிவம்,சுடர் ஒளி நகர் கமிட்டித் தலைவர் சிவக்குமார்,பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் முருகேசன் ,பள்ளி நிர்வாக குழுத் தலைவர் மனோகரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
முன்னதாக அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் அவர்கள் 2020 ஆம் ஆண்டில் மாநில நல்லாசிரியர் விருது பெற்ற பள்ளித்தலைமையாசிரியை வெ.சத்யா அவர்களுக்கு பள்ளியின் சார்பில் மடிக்கணியை வழங்கிப் பாராட்டினார்.
பள்ளித்தலைமை ஆசிரியை வெ.சத்யா வரவேற்றுப் பேசினார்.முடிவில் இடைநிலை ஆசிரியை ஆர்.சத்யா நன்றி கூறினார்..
விழாவில் ஏராளமான ஊர்ப்பொதுமக்கள்,அரசியல் பிரமுர்கள்,அலுவலர்கள் கலந்து கொண்டனர்.