இந்தியாவில் 35% இளம் குழந்தைகள் இன்னும் வளர்ச்சி குன்றிய நிலையில் உள்ளனர்
திருமதி. உமா மகாதேவன்,
முதன்மைச் செயலர்,
ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை,
கர்நாடகா.
இந்தியாவின் மக்கள் தொகையில் 69% பெண்கள் மற்றும் குழந்தைகள் – மக்கள் தொகை கணக்கெடுப்பு 2011-ன் படி மொத்தம் 833 மில்லியன். அண்மையில் மேற்கொள்ளப்பட்ட, தேசிய குடும்ப சுகாதார ஆய்வு 5-ன் படி (NFHS-5), இந்தியாவில் 35% இளம் குழந்தைகள் இன்னும் வளர்ச்சி குன்றிய நிலையில் உள்ளனர். ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக கணிசமான எண்ணிக்கையிலான இளம்பெண்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் பாதிக்கப்படுகின்றனர். நாட்டில் ஊட்டச்சத்து குறைபாட்டை களைவதில் நிலையான முன்னேற்றம் ஏற்பட்ட போதிலும், இன்னும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்பது தெளிவாகிறது.
ஊட்டச்சத்து குறைபாட்டைக் குறைப்பதற்கான ஒரு விரிவான முயற்சியை மேற்கொள்ள வாழ்க்கைச் சுழற்சி அணுகுமுறை அவசியமாகிறது. இந்த அணுகுமுறையின் படி நாட்டில் உள்ள அங்கன்வாடி மையங்கள் இருக்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு, கடந்த நாற்பது ஆண்டுகளில் 1.4 மில்லியன் மையங்களாக வளர்ச்சி கண்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவை (ICDS) அமைப்பின் மூலம், தாய்மார்கள், வளர்இளம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு அத்தியாவசியமான கூடுதல் ஊட்டச்சத்து மற்றும் ஊட்டச்சத்துக் கல்வியை வழங்குவதற்கு வகை செய்யப்பட்டுள்ளது. இத்தகைய நடவடிக்கைகள் மூலம் அனைவருக்கும் சிறந்த நன்மைகள் கிடைப்பதை உறுதி செய்கிறது. இதுவே ஊட்டச்சத்து 2.0-ன் சக்தி வாய்ந்த தொலைநோக்குப் பார்வையாகும்.
ஊட்டச்சத்து குறைபாடுகள் பிறப்பதற்கு முன்பே தொடங்குகிறது. குழந்தைத் திருமணம், இளம் பெண்களிடையே குறைவான ஊட்டச்சத்து நிலை மற்றும் பெண்களின் குறைந்த அளவிலான கல்வி போன்ற சிக்கலான சமூகப் பிரச்சனைகளே இதற்கு காரணமாக அமைந்துள்ளது. எனவே, தலைமுறைகளுக்கு இடையேயான ஊட்டச்சத்து குறைபாட்டின் சுழற்சியை உடைப்பதற்கான முக்கிய முதல் படியாக, “முதல் 1000 நாட்கள் அணுகுமுறை” பின்பற்றபட வேண்டும். இதன் பொருள் இரண்டு விஷயங்களை உறுதி செய்வதாகும்: கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் உணவுப் பன்முகத்தன்மையுடன் போதுமான ஊட்டச்சத்து, ஆதரவு மற்றும் கவனிப்பைப் பெறுகின்றனர்; மேலும் தாய்ப்பால் மற்றும் நிறைவான உணவு ஆகிய நிலைகள் முக்கிய கவனத்தைப் பெறுகின்றன. வளர்ச்சி மற்றும் ஊட்டச்சத்து நிலையை கண்காணிக்க ஒவ்வொரு குழந்தையும் தவறாமல் பரிசோதிக்கப்பட வேண்டும். வளர்ச்சி குன்றியதாக அடையாளம் காணப்பட்ட இளம் குழந்தைகளுக்கு , அவர்களின் வளர்ச்சியை மீண்டும் சரியான பாதையில் கொண்டு வரத் தேவையான கவனமும் கவனிப்பும் உடனடியாக வழங்கப்பபட வேண்டும்.
இந்த இயக்கத்தின் வெற்றி நான்கு தூண்களில் உள்ளது: பணியாளர்களின் திறன்-கட்டமைப்பு, குறிப்பாக முன்னணி பணியாளர்கள்; பல்துறை
ஒருங்கிணைப்பு; சமூகம்; மற்றும் வெளிப்படைத்தன்மை, பொறுப்பு மற்றும் விளைவுகளுக்கான பயனுள்ள கண்காணிப்பு உள்ளிட்ட நிர்வாகத்திறன் ஆகியவை அடங்கும்.
முன்னணி பணியாளர்களின் திறன் கட்டமைப்பு என்பது குறிப்பாக, புதிதாக பணியில் சேர்க்கப்பட்டவர்களுக்கு, தனிப்பட்ட பயிற்சியின் கலவையாக இருப்பதுடன், தகவல்களைப் புதுப்பித்துக் கொள்வதில் வழக்கமான ஆன்லைன் அமர்வுகள் இருக்க வேண்டும். மேற்பார்வையாளர்களுக்கு விரிவான பயிற்சில் அளிப்பதன் மூலம் திறன் வாய்ந்த சான்றளிக்கப்பட்ட பயிற்சியாளர்களாக விரைவில் உருவாக்க உதவிடும். உதாரணமாக, கர்நாடகா மாநிலத்தில் பஞ்சாயத்து ராஜ் துறையில் தாலுகா அளவிலான பயிற்சி மையங்களின் இணையதள வசதியை கொண்டு அங்கன்வாடி தொழிலாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களின் பயிற்சிக்கு பயன்படுத்தப்படலாம்.
அங்கன்வாடி உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் திசையில் ‘சக்ஷம் அங்கன்வாடி’ என்ற கருத்து ஒரு முக்கியமான படியாகும்.
குடிநீர், சுகாதாரம், சுத்தமான சமையலறைகள், நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட அங்கன்வாடி இடவசதிகள் மற்றும் வெளிப்புற விளையாட்டுப் பகுதிகள் ஆகிய அனைத்தும் சிறு குழந்தையின் நல்வாழ்வு மற்றும் முழுமையான வளர்ச்சிக்கு பெரும் பங்களிப்பை வழங்குகின்றன. அங்கன்வாடி மையங்களின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த மாவட்டம், வட்டம் மற்றும் கிராம பஞ்சாயத்து வளர்ச்சி நிதிகளுடன் 15-வது நிதிகுழுவின் மானியங்கள் மற்றும் கிராம பஞ்சாயத்துகளின் சொந்த வளங்கள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம், சிறப்பு பகுதி மேம்பாட்டு நிதி மற்றும் SCP/TSP நிதிகளுடன் அங்கன்வாடி உள்கட்டமைப்பை மேம்படுத்த கர்நாடகா மாநிலம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
அங்கன்வாடி உள்கட்டமைப்பு மட்டுமில்லாமல், திட்ட ஒருங்கிணைப்பின் மூலம் பயனடையலாம். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் மற்றும் தேசிய ஊரக வாழ்வாதார இயக்கம் ஆகிய திட்டங்களின் ஆதரவுடன் கிராமப்புற வாழ்வாதார திட்டங்களை ஒருங்கிணைப்பதில் ஒரு சிறந்த வாய்ப்பு உள்ளது. கர்நாடகாவில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் ஏற்கனவே அங்கன்வாடி கட்டிடங்கள் மற்றும் ஊட்டச்சத்து தாவர தோட்டங்களை உருவாக்க திறம்பட ஒன்றிணைக்கப்பட்டுள்ளது. தேசிய ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மகளிர் சுயஉதவி குழுக்கள் அங்கன்வாடிகளுக்கு புதிய பச்சைக் காய்கறிகள், முட்டைகள் மற்றும் கடலை மிட்டாய்களை உள்நாட்டிலேயே வழங்க முடியும். இடம் குறைவாக உள்ள நகர்ப்புற அங்கன்வாடிகளுக்கு, நகர்ப்புற மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் அருகில் உள்ள அங்கன்வாடிகளுக்கு உணவு சமைத்து விநியோகம் செய்யும் செயல்முறை குறித்தும் சிந்திக்க வேண்டும்.
இறுதியாக, அங்கன்வாடி மையங்களில் குழந்தைப் பருவ பராமரிப்பு மற்றும் கல்வி (ECCE) மீதான புதிய கவனம் வரவேற்கத்தக்கது. இது நாட்டில் உள்ள அங்கன்வாடி மையங்களில் உள்ள லட்சக்கணக்கான குழந்தைகளுக்கு தகுதியான துடிப்பான மற்றும் அக்கறையுள்ள தொடக்க நிலை கற்றல் சூழலை வழங்கும்.