“ஜல் சக்தி திட்டம்: மழை நீர் சேமிப்பு இயக்கத்தை அனைவரின் பணியாக மாற்றுவோம்”
திரு.கஜேந்திர சிங் ஷெகாவத்,
மத்திய அமைச்சர்,
ஜல் சக்தி அமைச்சகம்
நிலத்தடி நீரை உலகில் அதிகம் பயன்படுத்தும் நாடாக இந்தியா உள்ளது. உலகளவில் கிடைக்கும் நீர்வளத்தில் கால்பங்கிற்கும் மேலாக இந்தியா பயன்படுத்துகிறது. பல தசாப்தங்களாக நாட்டின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதில் நிலத்தடி நீர் முக்கியப் பங்கு வகிக்கிறது. லட்சக்கணக்கான குழாய் கிணறுகள் மூலம் ‘பசுமைப் புரட்சி’ வெற்றிகரமாவதை உறுதி செய்ததில் இது முக்கியமானதாக இருந்தது. அபரிமிதமான இந்த வளம் தற்போது வேளாண் பாசனத்தில் 60 சதவீதத்திற்கு கூடுதலாகவும், ஊரக குடிநீர் விநியோகத்தின் 85 சதவீத அளவுக்கும், நகர்ப்புற குடிநீர் விநியோகத்தில் 50 சதவீதத்திற்கு மேலும் பயன்படுத்தப்படுகிறது.
நிலத்தடி நீர் அதிகப்படியாக உறிஞ்சப்படுவதால் மதிப்புமிக்க இந்த வளம் கணிசமான அளவு குறைந்து வருகிறது. பாதுகாப்பான குடிநீர் பற்றாக்குறை காரணமாக ஏற்படும் சுகாதாரப் பிரச்சனைகள் அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்துவதிலிருந்து மக்கள் குடிபெயர்ந்து செல்வது வரை தண்ணீர் பற்றாக்குறை கடுமையான தாக்கத்தை உள்ளாக்குகிறது.
இந்தப் பிரச்சனையை எதிர்கொள்ள பிரதமரால் ஊக்குவிக்கப்பட்ட மத்திய அரசு ஜல் சக்தி திட்டத்தை 2019-ல் தொடங்கியது. தங்களின் அதிகார எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இந்த இயக்கத்திற்கு தலைமை தாங்குமாறு கோரி, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதலமைச்சர்களுக்கும், அனைத்து பஞ்சாயத்துத் தலைவர்களுக்கும் பிரதமர் தாமே கடிதம் எழுதினார்.
இதன் தொடர்ச்சியாக ஜல் சக்தி திட்டம் – மழை நீர் சேகரிப்பு இயக்கம் – 2022 குடியரசுத் தலைவரால் 2022 மார்ச் 29 அன்று தொடங்கப்பட்டது. மழை நீரை சேகரித்து நிலத்தடி நீரை அதிகப்படுத்துவதற்கான மக்கள் இயக்கத்தின் மூன்றாவது ஆண்டாக இது உள்ளது.
ஜல் சக்தி திட்டம் கவனம் செலுத்தும் 5 அம்சங்களாவன –
தண்ணீர் சேமிப்பு மற்றும் மழைநீர் சேகரிப்பு, பாரம்பரிய மற்றும் இதர நீர்நிலைகளைப் புனரமைத்தல், தண்ணீரை மீண்டும் பயன்படுத்துதல், நீர்நிலைகளை நிரப்புதல், நீர்நிலைகள் மேம்பாடு, தீவிரமாகக் காடு வளர்ப்பு. இது தவிர ஒன்றிய தண்ணீர் சேமிப்புத் திட்டங்கள் மற்றும் மாவட்ட தண்ணீர் சேமிப்புத் திட்டங்கள் மேம்பாடு, வேளாண் அறிவியல்
மையங்களின் நிகழ்வுகள், நகர்ப்புற கழிவுநீர் மறுபயன்பாடு, அனைத்து கிராமங்களையும் முப்பரிமாண முறையில் வரைபடம் தயாரித்தல் ஆகியவையும் சிறப்பு அம்சங்களாக உள்ளன.
2.73 லட்சம் தண்ணீர் சேமிப்பு மற்றும் மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை உருவாக்குதல், 45,000 நீர்நிலைகள், குளங்களை புதுப்பித்தல், 1.43 லட்சம் மறுபயன்பாடு மற்றும் நீர்நிரப்பும் அமைப்புகளை உருவாக்குதல், 1.59 லட்சம் நீர்நிலை மேம்பாடு தொடர்பான பணிகள், 12.36 கோடி மரக்கன்றுகள் நடுதல், 1372 வட்டார தண்ணீர் சேமிப்புத் திட்டங்கள் தயாரித்தல் போன்றவை 2019-ல் அனைத்துத் தரப்பினரின் ஒன்றுபட்ட முயற்சிகளால் சாதிக்கப்பட்டுள்ளது.
2019-ல் கிடைத்த வரவேற்பால் ஊக்கம் பெற்று 2021 ஆம் ஆண்டு “ஜல் சக்தி திட்டம்: மழை நீர் சேகரிப்பு” இயக்கம் அனைத்து மாவட்டங்களிலும் தொடங்கப்பட்டது. இது 2021 மார்ச் 22 முதல் நவம்பர் 30 வரை “எங்கே, எப்போது மழை பெய்யும் போதும் சேகரிப்போம்” என்ற மையப்பொருளுடன் அமலாக்கப்பட்டது. இந்தக் காலத்தில் தண்ணீர் தொடர்பான 42 லட்சம் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இத்துடன் 36 கோடி மரக்கன்றுகள் நடப்பட்டன. மழைநீர் சேகரிப்பு தொடர்பான பல்வேறு பணிகளுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் மட்டும் ரூ.65,000 கோடிக்கும் அதிகமாக செலவிடப்பட்டது.
இந்த இயக்கம் வெற்றி பெற தனிநபர்கள், குழுக்கள், குடியிருப்போர் நல அமைப்புகள், சுயஉதவிக் குழுக்கள், பெரு நிறுவனங்கள், ஊடக நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் என அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவது அவசியமாகும்.
நமக்காகவும், வரும் தலைமுறைகளுக்காகவும் தண்ணீர் பாதுகாப்புடன் கூடிய இந்தியாவுக்கு நாம் உறுதியேற்போம்.