சிம்ஸ் மருத்துவமனையின் ‘ஹலோ டாக்டர் 2001 2001’ – திட்டம்! தமிழ்நாடு மருத்துவக்கல்வி மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மாண்புமிகு திரு. மா. சுப்ரமணியன் தொடங்கி வைத்தார்

சென்னை மாநகரில் சிறந்த மருத்துவமனைகளுள் ஒன்றான சிம்ஸ் மருத்துவமனையில், ‘ஹலோ டாக்டர் – 2001 2001’ என்ற செயல்திட்டத்தை தமிழ்நாடு மருத்துவக்கல்வி மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மாண்புமிகு திரு. மா. சுப்ரமணியன் இன்று தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் தமிழ்நாடு அரசின் நலவாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையின் முதன்மைச் செயலர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் மற்றும் எஸ்ஆர்எம் குழுமத்தின் தலைவர் டாக்டர். பி. ரவி பச்சமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சென்னையில், இல்லங்களில் நோயாளிகளுக்கான உடல்நலப் பராமரிப்பு சேவைகளோடு, இல்லங்களிலேயே மருத்துவ சிகிச்சையையும் வழங்குகின்ற ‘ஹலோ டாக்டர் – 2001 2001’ செயல்திட்டமானது, முறையான கண்காணிப்பு மற்றும் சிகிச்சை நெறிமுறைகளோடு மெய்நிகர் (Virtual Consultation) முறையில் மருத்துவர்களது ஆலோசனையையும், செயல்நடவடிக்கையையும் வழங்கும் வகையில், சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. சிம்ஸ் மருத்துவமனையில் கிடைக்கக்கூடிய அதே அளவிலான உடல்நல பராமரிப்பு சேவையை, நோயாளிகள் அவர்களது வீடுகளில் சௌகரியமாக இருந்துகொண்டே பெறமுடியும் என்பது இத்திட்டத்தின் சிறப்பம்சமாகும். வயது முதிர்ந்த நோயாளிகள் மற்றும் குழந்தைகளுக்கு சேவை வழங்குவதற்காக இச்செயல்திட்டம் தொடங்கப்பட்டிருக்கின்ற போதிலும், 50-க்கும் மேற்பட்ட வெவ்வேறு தீவிர நோய்நிலைகளுக்கு வீடு தேடி வருகிற மருத்துவர் மற்றும் செவிலியர் அடங்கிய ஒரு குழுவால் முறையாகவும், பாதுகாப்பாகவும் மற்றும் உரிய நேரத்திலும் சிகிச்சையளிக்கப்படும். மருத்துவமனை சிகிச்சைக்குப் பிறகு வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படும் நோயாளிகளுக்கு பின் தொடர் சிகிச்சையை வீட்டிலேயே வழங்குவதையும் தனது இலக்காக சிம்ஸ் மருத்துவமனை கொண்டிருக்கிறது. துல்லியமான சிகிச்சையையும், வழிகாட்டலையும் வழங்கும் ஒரு சீரிய முயற்சியாக பல்வேறு நோய்கள் பற்றி அறிந்து கொள்ளவும் மற்றும் மருத்துவர்களிடமிருந்து உரிய நேரத்தில் சரியான சிகிச்சை ஆலோசனையைப் பெறவும் ஹலோ டாக்டர் சேவையைப் பயன்படுத்துமாறும் சென்னைவாழ் மக்களை சிம்ஸ் மருத்துவமனை ஊக்குவிக்கிறது.
இத்திட்டத்தினை தொடங்கி வைத்துப் பேசிய தமிழ்நாடு மருத்துவக்கல்வி மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மாண்புமிகு திரு. மா. சுப்ரமணியன் கூறியதாவது: “நோயாளிகளுக்குத் தேவைப்படும் சிகிச்சை பராமரிப்பை உறுதிசெய்ய சமீபத்திய புத்தாக்கங்கள் மற்றும் தொழில்நுட்பத்தை திறம்பட பயன்படுத்துவதில் சிம்ஸ் மருத்துவமனை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஹலோ டாக்டர் – 2001 2001 செயல்திட்டத்தை தொடங்கியிருப்பதன் மூலம் உலகத் தரத்தில் மருத்துவ சேவைகளை மருத்துவமனைகளுக்கு வெளியே மக்களின் இல்லங்களுக்கே சென்று வழங்க சிம்ஸ் இப்போது தயாராகி இருக்கிறது. மருத்துவமனையில் கிடைக்கக்கூடிய உயர் சிகிச்சையை அவர்களது வீடுகளிலேயே நோயாளிகள் பெறவேண்டும் என்ற குறிக்கோள் மீது சிம்ஸ் கொண்டிருக்கும் பொறுப்புறுதி பாராட்டுக்குரியது. முறையான சிகிச்சை நெறிமுறைகளைப் பின்பற்றி இல்ல சூழல்களிலேயே 50-க்கும் அதிகமான தீவிர நோய்பாதிப்பு நிலைகளுக்கு பாதுகாப்பாக சிகிச்சையளிப்பதில் ஹலோ டாக்டர் – 2001 2001 திட்டம் மிக முக்கியமான பங்காற்றும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.”

எஸ்ஆர்எம் குழுமத்தின் தலைவர் திரு. ரவி பச்சமுத்து இந்நிகழ்வில் பேசுகையில், “நோயாளிகளுக்குத் தேவைப்படும் உயர்தர சிகிச்சை கிடைப்பதை உறுதிசெய்ய சிம்ஸ் – ல் நாங்கள் பொறுப்புறுதி கொண்டிருக்கிறோம். நோயாளிகளிடமிருந்து எங்களுக்கு கிடைத்திருக்கின்ற யோசனைகள், கருத்துகளின் அடிப்படையில் ஹலோ டாக்டர் – 2001 2001 செயல்திட்டத்தை நாங்கள் வடிவமைத்து உருவாக்கியிருக்கிறோம். மக்களின் விருப்பத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இத்திட்டம், சிறந்த மருத்துவப் பணியாளர்கள் மற்றும் சிறப்பான தொழில்நுட்பத்தின் நேர்த்தியான கலவையாக இருக்கிறது. நோயாளிகள் எதிர்மறையான விளைவுகளால் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்ய அவர்கள் மீது தொடர் கண்காணிப்பை கொண்டிருப்பதே இல்லம் தேடிச் செல்லும் இத்திட்டத்தின் நோக்கமாகும். இல்லங்களுக்கான உடல்நல பராமரிப்பு சேவைகளோடு தீவிர பாதிப்புகளுக்கான மருத்துவமனை சிகிச்சையை வீட்டிலேயே பெறுவதற்கு இத்திட்டம் உதவுகிறது. தங்களது இல்லத்தில் அல்லது எமது மருத்துவமனை அமைவிடத்தில் இச்சேவைகளைப் பெறுவது குறித்து முடிவு செய்வது நோயாளிகளின் விருப்பத்தைப் பொறுத்தது.” என்று கூறினார்.
ஹலோ டாக்டர் – 2001 2001 திட்டத்தின் ஒரு பகுதியாக, அவசியமான அனைத்து மருத்துவ சாதனங்களையும், கருவிகளையும் கொண்டிருக்கின்ற மருத்துவ வாகனங்களை சிம்ஸ் மருத்துவமனை அறிமுகம் செய்திருக்கிறது. ஹலோ டாக்டர் 2001 2001 செயல்திட்டத்தை நிர்வகிப்பதற்காகவே பயிற்சி அளிக்கப்பட்ட 20-க்கும் அதிகமான தொழில்முறை பணியாளர்களைக் கொண்ட ஒரு சிறப்பு கால்சென்டர் (அழைப்பு மையம்) வசதியையும் இம்மருத்துவமனை உருவாக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

By V.BALAMURUGAN 9381811222

Arasumalar.com Amtv.asia Arjunatv.in மக்கள் வெளிச்சம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *