சௌபாக்யா- நாம் சாதிக்க துணிந்த கனவு
ஆர். லட்சுமணன், செயல் இயக்குநர்,ஊரக மின்மயமாக்கல் கழகம், இந்திய அரசு.
மின்மயமாக்கல் வாய்ப்புகளின் உலகைத் திறக்கிறது. இது குடி மக்களுக்கு அதிகாரமளிக்கிறது. அவர்களின் வாழ்க்கையின் தரத்தை மாற்றியமைக்கிறது. சிறு மற்றும் வளர்ந்து வரும் தொழில்களுக்கான பணி நேரத்தை நீட்டிக்கிறது. சுகாதார நிலையை மேம்படுத்துகிறது. அனைத்துப் பகுதிகளிலும் உள்ள சிறார்களின் கற்றல் வாய்ப்புகளையும் மேம்படுத்துகிறது. ஊரகம் மற்றும் நகர்புறங்களில் உள்ளவர்களுக்கு பாதுகாப்பை விரிவுபடுத்துகிறது. இதுபோன்ற வாய்ப்புகளை ஏற்படுத்துவது மட்டுமின்றி பிரகாசமான, நீடிக்கவல்ல எதிர்காலத்தைக் கொண்டு வருகிறது.
கிராமங்களை மின்மயமாக்கும் கடினமானப் பணியைப் பூர்த்தி செய்த அரசு நாட்டிலுள்ள அனைத்து வீடுகளுக்கும் மின்னிணைப்பு என்பதில் கவனம் செலுத்தத் தொடங்கியது. இதையடுத்து சௌபாக்யா திட்டத்தை மாண்புமிகு பிரதமர் தொடங்கி வைத்தார். இந்தத் திட்டத்தை சவால்மிக்க 18 மாதங்களில் நிறைவேற்ற கால இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதற்கு ரூ.16,320 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. சௌபாக்யா என்பது தேசப் பயணத்தில் முக்கிய அம்சமாகும். இந்தப் பயணம் லட்சக்கணக்கான இந்தியர்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஓர் இதிகாசத்திற்கு இணையான சம்பவம் போல ஒரு சில மாதங்களிலேயே தேசம் சாதனை படைத்துள்ளது. உலகின் மிகப் பெரிய திட்டமான அனைத்து வீடுகளுக்கும் மின்சாரம் என்ற இயக்கம் வாழ்க்கையில் கொண்டுவரப்பட்டது.
சௌபாக்யா திட்டத்தின் அமலாக்கம் ஒத்துழைப்பு கூட்டமைப்பின் குறிப்பிடத்தக்க வெற்றியாகும். இலக்குகளை குறித்த காலத்தில் அடைவதற்கு மத்திய அரசும் மாநில அரசுகளும் அயராது பணியாற்றியுள்ளன. அனைத்து வீடுகளுக்கும் மின்னிணைப்பை வழங்க 56 விநியோக நிறுவனங்கள் ஓய்வின்றி பணியாற்றின. சௌபாக்யா முகாம்கள் கிராம நிலையில் ஒருங்கினைக்கப்பட்டு பயனாளிகளை தொடர்பு கொண்டு உடனுக்குடன் மின்னிணைப்புகள் வழங்கப்பட்டதால். எந்த வீடும் விடுபடாமல் பார்த்துக்கொள்ளப்பட்டது. நாட்டின் பல்வேறு மாநிலங்களில் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த ‘சௌபாக்யா ரதங்கள்’ பயணம் மேற்கொண்டன. இந்தத் திட்டம் தொடர்பான அனைத்து விசாரணைகளுக்கும் பயனாளிகளின் குறைகளை தீர்ப்பதற்கும் உடனடியாக இணைப்புகளை வழங்குவதற்கும் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டது.
வரலாற்றுப் பக்கங்களில் 1879-ம் ஆண்டில் கல்கத்தா (இப்போது கொல்கத்தா) வீதிகளில் மின்விளக்குகள் பயன்படுத்தப்பட்டன. 2019 மார்ச் 31 அன்று 140 ஆண்டுகளுக்குப் பின் அனைத்து வீடுகளுக்கும் மின்னிணைப்பு என்ற சாதனையை இந்தியா ஏற்படுத்தியுள்ளது. 2.82 கோடி வீடுகளுக்கு புதிதாக
மின்னிணைப்பு அளிக்கப்பட்டப் பின் கிராமங்களிலும், நகரங்களிலும் 24 மணி நேரமும் தடையில்லா மின்சாரத்தை வழங்குவதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. வளர்ச்சியின் புதிய சகாப்தத்தில் இந்தியா அடியெடுத்து வைத்துள்ள நிலையில் ‘அனைவருக்கும் மின்சாரம்’ என்ற நமது இலக்கு எட்டப்பட்டுள்ளது.