புதிய இந்தியாவின் புதிய சாதனை – 400 பில்லியன் அமெரிக்க டாலர் வணிகப் பொருட்கள் ஏற்றுமதி

திரு.பியூஷ் கோயல், மத்திய தொழில், வர்த்தகம் நுகர்வோர் நலன், உணவு, பொது விநியோகம் மற்றும் ஜவுளிகள் துறை அமைச்சர்

400 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புக்கு பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ள இந்தியாவின் சாதனை, மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த உறுதியான நோக்கத்துடன் 2014 முதலான நிர்வாகம், சீர்திருத்தம், மாற்றங்கள் ஆகியவற்றின் ஒளிரும் உதாரணமாகும். ஏற்றுமதி அதிகரிப்பு விவசாயிகள், கைவினைக் கலைஞர்கள், நெசவாளர்கள், ஆடை தொழிலாளர்கள் ஆகியோருக்கு உதவி செய்துள்ளது. வணிகத்திற்கு உதவி செய்வதோடு சிறிய மற்றும் பெரிய அளவில் வேலைவாய்ப்பை அதிகரிக்கிறது.

கொவிட் காரணமாக பாதிக்கப்பட்ட உலகில் 400 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள பொருட்கள் ஏற்றுமதி இலக்கு என்பது பலருக்கு சாத்தியமில்லாததாக தோன்றியது. ஆனால் பிரதமர் நரேந்திர மோடி அரசு உறுதியான, விரைவான செயல்பாடு, நிலைமையை சரியாக மதிப்பீடு செய்தல், பொருட்களை அடையாளம் காணுதல், எந்தப் பகுதிகளுக்கு ஏற்றுமதி அதிகரிக்க முடியும் என்பதை தீர்மானித்தல், ஏற்றுமதியாளர்களுடனும், தொழிற்சாலை அமைப்புகளுடனும் நட்புறவான அணுகுமுறை ஆகியவற்றால் இது சாத்தியமாகி உள்ளது.

அது மட்டுமின்றி கொள்கை நடைமுறைகள், சீர்திருத்தங்கள், ஏற்றுமதி மேம்பாட்டுத் திட்டங்கள், உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத் தொகை போன்ற முக்கியமான முன்முயற்சிகள், துணிச்சலான முடிவுகள் போன்றவற்றால் உலகில் அதிகமாக வளர்ச்சியடையும் முக்கியப் பொருளாதாரமாக இந்தியா மாறியது. 2021-22-ல் மாதாந்திர சாதனை இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டு ஏற்றுமதி அதிகரிக்கப்பட்டதால் தற்போது வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.

ஏற்றுமதி பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்வதோடு வேலைவாய்ப்பை உருவாக்கவும் உதவுகிறது. பெருந்தொற்றின் உச்சமான காலத்திலும் கூட தரமான பொருள்களையும், சேவைகளையும் வழங்க முடிந்த நம்பகமான, மதிப்புமிக்க பங்குதாரராக இந்தியாவை உலகம் தற்போது பார்க்கிறது. இதன் விளைவு கண்கூடானது. இந்தியா அதன் இலக்கை நிர்ணயித்த காலத்திற்கு 9 நாள் முன்னதாகவே எட்டியுள்ளது.

இந்த சாதனை என்பது வெறும் எண்ணிக்கை சம்பந்தப்பட்டதல்ல. புதிய பொருட்கள் ஏற்றுமதி, புதிய சந்தைகள் விரிவாக்கம், உற்பத்திப் பொருட்களின் ஏற்றுமதி அதிகரிப்பு, உலகளாவிய உணவுப் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்குக் கடினமாக உழைக்கின்ற விவசாயிகள் மற்றும் சிறு வணிகர்களின் பாராட்டத்தக்க பங்களிப்பு போன்ற வியப்பளிக்கும் புதிய நிகழ்வுப் போக்குகளும் ஏற்பட்டுள்ளன.

வேளாண் ஏற்றுமதி சுமார் 25 சதவீதம் அதிகரித்து 50 பில்லியன் அமெரி்க்க டாலர் அளவிற்கு பதிவாகி உள்ளது. இதே போல் காபி ஏற்றுமதியும் அதிகரித்து ஒரு பில்லியன் அமெரிக்க டாலராக பதிவாகியுள்ளது.

இந்த வேகத்தை தொடர்ந்து பராமரிப்பது இந்தியாவின் இப்போதைய தேவையாக உள்ளது. மேலும் போட்டித்தன்மைக் கொண்ட உலகில் நமது உற்பத்தியாளர்களும், ஏற்றுமதியாளர்களும், கொள்கை வகுப்போரும் மனநிறைவுப் பெற்றுவிடக் கூடாது. இந்திய தொழில்துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் முதலீட்டை அதிகரித்தது அவசியமாகும். மேலும் தரத்திலும் கவனம் செலுத்த வேண்டும். இந்திய மக்களுக்கு விற்கப்பட்ட பொருட்களுக்கும், ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்களுக்கும் இடையே தரத்தில் மிகப்பெரிய இடைவெளி இருந்த காலம் ஒன்று இருந்தது. இப்போது அது வெளியேற்றப்பட்டு விட்டது. இனியும் அத்தகைய இடைவெளி இருக்கக் கூடாது.

ஒரு காலத்தில் இந்தியா பெற்றிருந்த மிகப் பெரும் வர்த்தக சக்தி என்ற அந்தஸ்தை மீண்டும் பெறுகின்ற நிலையில் உள்ளது. இதுவொரு லட்சிய இயக்கமாகும். புதிய இந்தியாவில் மாற்றத்தை உருவாக்கும் பல முன்முயற்சிகளையும், சாதனைகளையும் தொகுத்துக் காணும்போது “ஒன்று செயல்படுத்தப்படும் வரை சாத்தியமில்லாதது போலவே தோன்றும்” என்று நெல்சன் மண்டேலா கூறியது நினைவுக்கு வருகிறது.

By V.BALAMURUGAN 9381811222

Arasumalar.com Amtv.asia Arjunatv.in மக்கள் வெளிச்சம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *