திறந்தவெளிக் கழிப்பிடமில்லாத கிராமங்களின் பட்டியலில் தமிழகம் முன்னிலை
–திருமதி வினி மகாஜன், செயலாளர், குடிநீர் மற்றும் துப்புரவுத்துறை
தேசப்பிதா மகாத்மா காந்தியடிகளின் 150-வது பிறந்த நாளையொட்டி அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக, இந்தியாவை திறந்தவெளிக் கழிப்பிடமில்லாத நாடாக மாற்றுவதற்கான தூய்மை இந்தியா திட்டம், பிரதமர் திரு நரேந்திர மோடியால் 8 ஆண்டுகளுக்கு முன் தொடங்கி வைக்கப்பட்டது. பிரதமரின் தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய தலைமை காரணமாக, நீடித்த வளர்ச்சிக்கான இலக்கு-6-ஐ அடைய ஐ.நா. சபை நிர்ணயித்த காலக்கெடுவுக்கு 11 ஆண்டுகள் முன்பாக, 2, அக்டோபர் 2019-லேயே, உலகிலேயே மாபெரும் பழக்க வழக்க மாற்ற பிரச்சார இயக்கத்தை மேற்கொண்ட நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது.
தூய்மை இந்தியா இயக்கம் – கிராமப்புறம் இரண்டாம் கட்டம், பிப்ரவரி 2020-ல், தொடங்கப்பட்டது. 2024 டிசம்பருக்குள் நாட்டில் உள்ள அனைத்து கிராமங்களையும் திறந்தவெளிக் கழிப்பிடம் இல்லாதவையாக மாற்றுவதே இத்திட்டத்தின் நோக்கமாகும். தற்போது நாடு முழுவதும் 50,000-க்கும் மேற்பட்ட கிராமங்கள், திறந்தவெளிக் கழிப்பிடம் இல்லாதவையாக மாற்றப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தும் மாநிலங்களின் பட்டியலில், 13,960 கிராமங்களை திறந்த வெளிக்கழிப்பிடம் இல்லாத கிராமங்களாக மாற்றி, தெலங்கானா முதலிடத்தில் உள்ளது. 11,477 கிராமங்களை திறந்தவெளிக் கழிப்பிடமில்லாதவையாக மாற்றி, தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது.
இந்த கிராமங்களில் சாண எரிவாயு உள்ளிட்ட கழிவு மேலாண்மை திட்டங்கள், சமையலறை மற்றும் சலவை நிலைய கழிவுநீர் மேலாண்மை, பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை, மனிதக்கழிவு மேலாண்மை போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. இதுதவிர, இந்த கிராமங்கள், மூன்று வகைகளாக பிரிக்கப்பட்டு தங்களது முன்னேற்றத்தை எடுத்துரைத்தன.
சுதந்திரப் பெருவிழாவின் ஒரு பகுதியாக 22,000-க்கும் மேற்பட்ட கிராமப் பஞ்சாயத்துக்களில் வசிக்கும் ஒரு கோடிக்கும் மேற்பட்ட மக்கள், பல்வேறு துப்புரவு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். 76,000-க்கும் மேற்பட்ட கிராமப் பஞ்சாயத்துக்கள், ஒருமுறை மட்டும் உபயோகிக்கக் கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளன.
தூய்மை இந்தியா இயக்கம் இரண்டாம் கட்டத்திற்காக ரூ.1,40,881 கோடி ஒதுக்கப்பட்டு, கிராமங்களில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் மற்றும் துப்புரவுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் கீழ் கழிவுகளைப் பணமாக்கும் நோக்கில் கழிவு மேலாண்மை மேலும் பரவலாக்கப்பட்டுள்ளது.