புதிய இந்தியா: அடுத்த 10 ஆண்டுகளை அதன் தொழில்நுட்ப ஆண்டுகளாக மாற்றுவது
-ராஜீவ் சந்திரசேகர் – இணையமைச்சர்.
(மத்திய மின்னணு, தகவல் தொழில்நுட்பம்,
திறன் மேம்பாடு, தொழில் முனைவோர் துறை)
மனிதகுல வரலாற்றில் காணப்பட்ட மிக மோசமான பெருந்தொற்றிலிருந்து உலகம் மெள்ள மெள்ள விடுபட்டு வருகிறது. இந்தப் பெருந்தொற்று உலகம் முழுவதும் பரவலாக வாழ்க்கையையும், வாழ்வாதாரங்களையும், பொருளாதாரங்களையும் சீரழித்தது. உலக மக்கள் தொகையில் ஏறத்தாழ ஆறில் ஒரு பங்கினைக் கொண்டுள்ள இந்தியாவும் கூட கடந்த 24 மாதங்களாக ஏராளமான சவால்களை சந்தித்துள்ளன.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையின் கீழ் பெருந்தொற்று காலத்தில் இந்தியாவின் கொவிட் நிர்வாகம் மற்றும் உறுதித்தன்மைக்கு உலகம் அதனைப் பாராட்டியது. நமது பிரதமர் முன்னணியிலிருந்து வழிநடத்தியதோடு முன்களப் பணியாளர்களுடன் உறுதியாக நின்றார். இந்தியாவில் தடுப்பூசி தயாரிக்கும் முயற்சிகளில் விஞ்ஞானிகளை ஊக்கப்படுத்தினார். இந்த நாட்டிற்கு புதிய தொலைநோக்குப் பார்வையையும் தற்சார்பு இந்தியா எனும் புதிய பொருளாதார சிந்தனையையும் பிரதமர் வழங்கினார். இந்த உறுதிக்கான காரணம், பெருந்தொற்றுக்கு முந்தைய ஆண்டுகளில் அரசு மேற்கொண்ட சீர்திருத்தங்களும், கடைப்பிடித்த கொள்கைகளும் ஆகும்.
குடிமக்களின் வாழ்க்கையில் மாற்றம் ஏற்படுத்துவது
பொருளாதார வாய்ப்புகளை விரிவுபடுத்துவது
குறிப்பிட்ட தொழில்நுட்பங்களில் முக்கியமான திறன்களை உருவாக்குவது
என்ற மூன்று தெளிவான நோக்கங்களுடன் 2015-ல் டிஜிட்டல் இந்தியா திட்டத்தைப் பிரதமர் தொடங்கி வைத்தார்.
ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் போன்ற வழக்கமான துறைகளில் மட்டுமின்றி, குடிமக்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கும், அதிகாரமளித்தலுக்கும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் உலகின் முக்கியமான நாடுகளில் ஒன்றாக இந்தியா மாறியுள்ளது. உலகின் மிகப் பெரிய டிஜிட்டல் அடையாள திட்டம் – ஆதார் (132 கோடி பதிவு), உலகின் மிகப்பெரிய தொழில்நுட்பத்தால் இயக்கப்பட்ட கொவிட் தடுப்பூசி திட்டம் (180 கோடி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளது), உலகின் மிகப் பெரிய நேரடிப் பயன்பரிமாற்றத் திட்டம் மற்றும் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துதல் (2022 நிதியாண்டு ரூ.76 லட்சம் கோடி), ஃபின்டெக் தொழில்நுட்பம் ஆகியவற்றுடன் முதல் இரண்டு நோக்கங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்று நாம் தெளிவாக கூறலாம்.
வரும் ஆண்டுகள் இந்தியாவின் தொழில்நுட்ப 10 ஆண்டுகள் என்று பிரதமர் நரேந்திர மோடி மிகச் சரியாகவே கூறியிருக்கிறார். அரசிலும், நிர்வாகத்திலும்
தொழில்நுட்பத்தை புத்தாக்கம் செய்வதற்கு உரிய தருணம் இதுவாகும். பொதுமக்களுக்கு சேவை செய்ய புதிய நிலைக்கு நிர்வாகத்தில் டிஜிட்டல்மயத்தின் புதிய அலையை அரசு விரைவில் தொடங்க உள்ளது.
இந்தியர்கள் அனைவருக்கும் திறந்த, பாதுகாப்பான, நம்பகமான, பொறுப்பேற்புடனான இணையதள இணைப்பை வழங்கும் முக்கியமான இலக்கு நிர்ணயிக்கப்பட உள்ளது. இந்தியாவில் தற்போது 82 கோடி பேர் இணையதளத்தைப் பயன்படுத்துகிறார்கள். 60 கோடி பேர் திறனறி செல்பேசிகளைப் பயன்படுத்துகிறார்கள். உலகில் இவ்வளவு அதிகளவில் இணையதளத்தைப் பயன்படுத்தும் ஜனநாயக நாடாக இந்தியா உள்ளது. டிஜிட்டல் அடிப்படைக்கட்டமைப்பு (அதாவது க்ளவ்ட், தரவுகள் மையம் போன்றவை), விரைவான அகண்ட அலைவரிசை வழங்கப்படுவது, எளிதாக கிடைக்கச்செய்வது ஆகியவற்றை தொடர்ந்து விரிவுபடுத்த நாங்கள் எண்ணியுள்ளோம். இது 6,50,000 கிராமங்கள் தற்சார்பை அடைய வழிவகுக்கும்.
பிரதமர் நரேந்திர மோடியின் தற்சார்பு இந்தியா என்ற தொலைநோக்கும், இந்தியாவின் தொழில்நுட்ப பத்தாண்டும் இந்திய இளைஞர்களுக்கு எதிர்காலத்தில் பிரகாசமான வாய்ப்புகளை உருவாக்கும். இந்தியாவின் ஒவ்வொரு இளைஞரும் மிக நல்ல வாய்ப்பினைப் பெற்று அவர்களும், அவர்களின் சமூகமும் இந்தியாவும் பிரகாசமான எதிர்காலத்தைக் கட்டமைப்பது எதார்த்தமாக அமையும். உலகளாவிய தொழில்நுட்பம் மற்றும் வர்த்தக சக்தியாக இந்தியா உருவாக இதுவே தருணம். உலகளாவிய தரத்துடன் டிஜிட்டல் பொருட்களையும், சேவைகளையும் உலகத்திற்கு வழங்குவதாக புதிய இந்தியா இருக்கும். இந்திய ஜனநாயகத்திலும், நிர்வாகத்திலும் மாற்றத்தை உருவாக்க தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் உலகில் மிகச் சிறந்த நாடாக இந்தியா விளங்கும்.