இந்தியாவில் முதலாவது கூட்டுறவுச் சட்டம் 1904-ல் இயற்றப்பட்டப் பின் கூட்டுறவு நிறுவனங்கள் துரிதமான மாற்றம் பெற்றிருப்பதை நாம் அனைவரும் காண்கிறோம். மாறி வரும் புதிய சூழலுக்கு ஏற்ப பட்ஜெட் ஒதுக்கீட்டுடன் கூட்டுறவுகளுக்கென்று தனியாக கூட்டுறவு அமைச்சகம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
பொருளாதாரத்தின் முக்கியத் துறைகளில் ஒன்றான கூட்டுறவுத் துறை கடன் மற்றும் கடன் அல்லாத சங்கங்களின் விரிவான வலைப்பின்னல் மூலம் ஊரக இந்தியாவில் பரவலாக சென்றடைந்துள்ளது. இந்தியாவில் மொத்தமுள்ள 8.5 லட்சம் கூட்டுறவு நிறுவனங்களின் சுமார் 20% (1.77 லட்சம் அமைப்புகள்) கடன் கூட்டுறவு சங்கங்கள் எஞ்சியுள்ள 80% கடன் அல்லாத கூட்டுறவு சங்கங்கள். இவை, மீன் வளர்ப்பு, பால்பண்ணை, நுகர்வோர், தொழில், சந்தை, சுற்றுலா, மருத்துவமனை, வீட்டுவசதி, போக்குவரத்து, தொழிலாளர், வேளாண்மை, சேவை, கால்நடை உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றவை. ஏறத்தாழ 90% கிராமங்களில் பல்நோக்கு கூட்டுறவு அமைப்புகள் உள்ளன. உறுப்பினர்களை பொறுத்தவரை சுமார் 2,090 மில்லியன் விவசாயிகள் கூட்டுறவு அமைப்புகளில் பதிவு செய்துள்ளனர். இவர்களில் 72% பேர் கடன் கூட்டுறவு அமைப்புகளிலும் 28% பேர் கடன் அல்லாத கூட்டுறவு சங்கங்களிலும் உள்ளனர். (என்சியுஐ, 2018,)
இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட தகவலில் 2018 மார்ச் 31 நிலவரப்படி நாட்டின் 6,39,342 கிராமங்களில் 13.2 கோடி உறுப்பினர்களுடன் 95,238 தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் உள்ளன. இந்த சங்கங்கள் கிராமங்களில் உள்ள விவசாயிகள் மற்றும் குறைந்த வருவாய் பிரிவினருக்கு பொருளாதார அதிகாரமளித்ததில் குறிப்பிடத்தக்க பங்கினை வகிக்கின்றன.
சுயஉதவி, சுயபொறுப்பு, ஜனநாயகம், சமத்துவம், சமபங்கு, ஒருமைப்பாடு ஆகிய மாண்புகளின் அடிப்படையில் கூட்டுறவு அமைப்புகள் இருப்பதாக சர்வதேச கூட்டுறவு அமைப்புகளின் கூட்டணி தெரிவிக்கிறது. இவற்றின் நிறுவனர்கள் பின்பற்றிய பாரம்பரியத்தின் காரணமாக நேர்மை, வெளிப்படைத்தன்மை, சமூகப் பொறுப்பு மற்றவர்கள் மீதான அக்கறை ஆகிய நெறிமுறைகள் மீது கூட்டுறவு அமைப்புகளின் உறுப்பினர்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். போதிய அளவு நிதி ஒதுக்கப்படாமை, கடனை திருப்பிச் செலுத்தாத குறைபாடுகள், தொழில் முறை ரீதியான ஊழியர்கள் பற்றாக்குறை, மந்தமான தொழில்நுட்ப பயன்பாடு போன்றவற்றால் நிர்வாகத்தில் சுணக்கம் ஏற்படுகிறது.
தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை டிஜிட்டல்மயமாக்கவும், வணிக ரீதியாக லாபம் ஈட்டுவதாக மாற்றுவதற்கும் தொழில்நுட்பப் பயன்பாட்டிற்கான முக்கிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி கடன் சங்கங்களை டிஜிட்டல்மயமாக்க மத்திய பட்ஜெட் 2022-23-ல் ரூ.350 கோடி
ஒதுக்கப்பட்டுள்ளது. 63,000 கடன் சங்கங்களின் கணினிமயமாக்கும் திட்டம் கூட்டுறவு அமைச்சகத்தால் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த கடன் சங்கங்களை டிஜிட்டல்மயமாக்குவது வேளாண்மை தொடர்பான பல முன்முயற்சிகளின் அமலாக்கத்திற்கு உதவும். மேலும் விவசாயிகள் கடன், உரங்கள், விதைகள் ஆகியவற்றை வெளிப்படைத்தன்மையோடு பெறுவதை உறுதி செய்யும். தொழில்நுட்பத்தின் மூலம் தரக்கட்டுப்பாடு என்பதும் இந்த சங்கங்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களின் உறுப்பினர்களுக்கு தொடர்ச்சியாக பயிற்சி அளிப்பது மற்றும் திறனை மேம்படுத்துவதன் மூலம் டிஜிட்டல் அறிவை விரிவுபடுத்துவது காலத்தின் தேவையாகும்.
கூட்டுறவு அமைப்புகளுக்கான பட்ஜெட் ஒதுக்கீடு வளர்ச்சி மற்றும் வளத்திற்கான இயக்கு சக்தியாக கூட்டுறவு அமைப்புகள் இருப்பதை காட்டுகிறது. புதிய கண்டுபிடிப்பு, தொழில் முயற்சி, பயிற்சி ஆகியவற்றை அதிகப்படுத்துவது பிரமிடின் அடிப்பகுதியை மேம்படுத்துவது எவ்வாறு என்பதை கோடிட்டுக் காட்டுகிறது. மேலும் கல்வி, சுகாதாரம், வேளாண்மை, ஜவுளி, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள், எரிசக்தி, சுற்றுச்சூழல் போன்ற துறைகளின் ஒருங்கிணைப்பு மற்றும் தொடர்புகளை முன்னெடுத்துச் செல்லவும் கூட்டுறவு சங்கங்கள் உதவும்.