வேளாண் காடுகள் மற்றும் மரம் சார்ந்த தொழில்களின் ஒருங்கிணைந்த வளர்ச்சி – கார்பன் சமநிலை பொருளாதாரத்திற்கான நடவடிக்கை

கார்பன் சமநிலை பொருளாதாரத்திற்கான வேளாண் காடுகள் மற்றும் தனியார் காடுகள்
மத்திய பட்ஜெட் 2022-23-ல், கார்பன் சமநிலை பொருளாதாரத்தை அடைவதற்கான சாதனமாக ‘வேளாண் காடுகள் மற்றும் தனியார் காடுகளை’ பயன்படுத்தியுள்ளது. இதில் விவசாயிகள் வழக்கமாக சாகுபடி செய்யக்கூடிய குறுகிய கால மரவகைகள் வேளாண் காடுகள் எனவும், நடுத்தர மற்றும் நீண்ட கால பலன்தரும் மரங்கள் தனியார் காடுகளாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் தனியார் காடுகள் என்பது, தனி நபர்கள் மற்றும் தோட்ட நிறுவனங்கள் தங்களது நிலத்தில் பயிரிடக்கூடியவையாகும்.
வேளாண் காடுகள் மூலம் சிறிய அளவிலான மரங்கள் உற்பத்தியில் இந்தியா ஏறத்தாழ தன்னிறைவை எட்டியுள்ள நிலையில், பெரிய அளவிலான மரங்களை வளர்க்க விவசாயிகள் முன்வராத நிலையில், இவற்றின் தேவையை பூர்த்தி செய்ய, பெருமளவுக்கு இறக்குமதியை சார்ந்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இப்பிரச்சனைக்கு தீர்வு காணும் விதமாக, தனியார் காடுகளை ஊக்குவிக்க மத்திய அரசு அண்மையில் மேற்கொண்ட முயற்சி, பெரிய அளவிலான மரங்களை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வதை ஊக்குவிப்பதுடன், பருவநிலை மாற்றத்தால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை எதிர்கொள்ளவும் உதவுவதாக அமைந்துள்ளது.
பருவநிலை மாற்றம் குறித்த பாரீஸ் உடன்படிக்கையின்படி 2030-ம் ஆண்டுக்குள் மேலும் 2.5 முதல் 3.0 பில்லியன் டன் அளவிற்கு கரியமில வாயு வெளியேற்றத்தை குறைக்க மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது. வேளாண் காடுகள் மற்றும் தனியார் காடுகள் திட்டத்தின் கீழ் உருவாக்கப்படும் தோட்டங்கள் கார்பனை தனிமைப்படுத்துவதோடு மட்டுமின்றி, அந்த தோட்டங்களில் வளர்க்கப்படும் மரங்களிலிருந்து தயாரிக்கப்படும் மரச்சாமான்கள், அவற்றின் வாழ்நாள் வரை கார்பனை கிரகித்து வைத்திருக்கக் கூடியவையாகும்.
வேளாண் காடுகள் திட்டத்தை விரிவுபடுத்த சில மாநில அரசுகள் தங்களது சொந்த நிதி மற்றும் வெளிநாட்டு உதவிகளுடன் கூடிய சமூகக் காடுகள் திட்டத்தை செயல்படுத்தியுள்ளன. விவசாயிகளுடன் நேரடி தொடர்பு கொள்வதன் மூலம் மரத் தொழிற்சாலைகளுக்கு தேவையான மூலப் பொருட்கள் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது. வேளாண் காடுகள் திட்டத்தில் கவனம் செலுத்தியதால், 2001-ல் இந்தியாவின் நிலப்பரப்பில்

5.6% ஆக இருந்த வனப்பகுதிக்கு வெளியே மரங்கள் வளர்க்கப்படும் பரப்பளவு, 2021-ல் 8.9% ஆக அதிகரித்துள்ளது.
சமீபத்திய ஆய்வுகளின்படி, 15 மில்லியன் கன மீட்டர் அளவுள்ள வட்டவடிவிலான மரங்களும், இந்திய ரூபாயில் 450 பில்லியன் மதிப்புள்ள மரப்பொருட்களும் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. மரம் சார்ந்த தொழில்களில் மூலப்பொருட்கள் பற்றாக்குறையை ஈடுகட்ட, விம்கோ சீடுலிங்க்ஸ், ஐடிசி பத்ராசலம் காகித ஆலை உள்ளிட்ட சில நிறுவனங்கள், தரமான மரக்கன்றுகளை வழங்கி, அங்கு விளையும் மரங்களை கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தங்களை மேற்கொண்டு மரம் வளர்ப்பை ஊக்குவித்து வருகின்றன. இந்த நடவடிக்கை, மரம் சார்ந்த தொழிற்சாலைகளின் மூலப்பொருள் கையிருப்பை உறுதி செய்துள்ளது. அதே போன்று ஹரியானாவின் யமுனா நகர் சுற்று வட்டாரப் பகுதிகள் நாட்டின் மொத்த பிளைவுட் உற்பத்தியில் 40% அளவிற்கு உற்பத்தி செய்து ‘பிளைவுட் தலைநகரம்’ என்றழைக்கப்படுகிறது . எனவே வேளாண் காடுகள் வளர்ச்சிக்கான ஒருங்கிணைந்த திட்டங்கள் மற்றும் மரம் சார்ந்த தொழிற்சாலைகள், மரத்தொழிலின் விரைவான வளர்ச்சியை உறுதி செய்துள்ளன.
நாட்டின் 100-வது சுதந்திர தினத்தை கொண்டாடவுள்ள 2047-ம் ஆண்டு வரையிலான அடுத்த 25 ஆண்டுகளில் கூடுதலாக 10 மில்லியன் ஹெக்டேர் விளை நிலங்கள் (இந்தியாவின் நிலப்பரப்பில் 3%) மரத்தோட்டங்களாக மாற்றப்பட்டு, இதில் 5 மில்லியன் ஹெக்டேர் பரப்பில் நடுத்தர மற்றும் நீண்டகால பலன் தரும் மரங்களும், எஞ்சிய 5 மில்லியன் ஹெக்டேர் பரப்புள்ள நிலங்களில் குறுகிய கால பலன் அளிக்கும் மரங்களும் நடப்படும். 100 இடங்களில் மரம் சார்ந்த தொழில் வளாகங்கள் உருவாக்கப்படும். தற்போது மரங்கள் இறக்குமதி செய்யும் நாடாக உள்ள இந்தியாவை, மரங்கள் ஏற்றுமதி செய்யும் நாடாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

By V.BALAMURUGAN 9381811222

Arasumalar.com Amtv.asia Arjunatv.in மக்கள் வெளிச்சம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *