கதிசக்தியின் மூலம் இந்தியாவின் வளர்ச்சியை துரிதப்படுத்த உலகத்தரம் வாய்ந்த திறமையை வளர்த்தெடுப்பது
திரு. எம்.கே. திவாரி, இயக்குநர்,
தொழில் பொறியியலுக்கான தேசிய நிறுவனம், மும்பை
பிரதமரின் கதிசக்தி (விரைவு சக்தி) திட்டம் லட்சியமிக்க, அதே நேரத்தில் உரிய நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒரு திட்டம் ஆகும். இந்தியாவின் 16 பல்வேறு அமைச்சகங்களிடையே முடிவெடுத்தல், அவற்றை செயல்படுத்தல் ஆகியவற்றை ஒருநிலைப்படுத்தி, உலகத்தரம் வாய்ந்த, பல்வேறு வகை தொடர்புக்கான கட்டமைப்பினை நாட்டிற்கு வழங்குவதை அது நோக்கமாகக் கொண்டது. கடந்த சில ஆண்டுகளில் திறன் வளர்ப்பிற்கான வாய்ப்புகள் சோதிக்கப்பட்டு அத்திசையில் புதிய முன்முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன.
பிரதமரின் கதிசக்தி திட்டத்தின் தொலைநோக்கிற்கு உதவிசெய்யும் வகையில் தளவாடத் துறையில் திறன் வளர்ப்பிற்கு நான்கு முக்கிய பகுதிகள் உள்ளன.
முதலாவதாக, நெசவு மையங்கள், மருந்து உற்பத்தி மையங்கள், பாதுகாப்புத் தளவாட உற்பத்தி மையங்கள், மின்னியல் பூங்காக்கள், தொழில்துறை தனிப்பாதைகள், மீன்பிடி மையங்கள் மற்றும் வேளாண் மண்டலங்கள் ஆகியவற்றின் தொடர்புத் தேவைகளை நிறைவேற்றுவதை இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இரண்டாவதாக, பொருளாதார மேடையில் நாடு மிக வேகமாக நகர்ந்து வரும் நிலையில் தளவாடத் துறையின் துணைப் பிரிவுகளின் ஊடாக செயல்படும் ஊழியர்களிடையே அதிகமான அளவில் தொழில்நுட்பத்தை மேற்கொள்வது, அவர்களிடையே டிஜிட்டல் அறிவை வளர்த்தெடுப்பது ஆகியவற்றுக்கான தேவை அதிகமான அளவில் உள்ளது.
மூன்றாவதாக, விநியோகச் சங்கிலியிலும் தளவாடத் துறையிலும் உள்ள தொழில்நுட்ப மற்றும் மேலாண்மை நிபுணர்களுக்கு தரவுகளின் அடிப்படையிலான ஆய்வு முறை மற்றும் முடிவெடுக்கும் திறன் ஆகியவை அவசியம் தேவைப்படுகின்றன.
இறுதியாக, ஒழுங்கமைந்த, இடையூறல்லாத வகையிலான சரக்கு போக்குவரத்துக்குத் தேவையான தகவல்களை பரிமாறிக் கொள்வது மற்றும் வலுவான கூட்டணி ஆகியவை விநியோகச் சங்கிலிக்கு மிகவும் அத்தியாவசியமானவை ஆகும்.
இத்தகைய காரணத்தினாலேயே, தொழில்துறை, கல்வி மற்றும் அரசு ஆகியவை ஒன்றிணைந்து திறன் வளர்ப்பிற்கான திட்டங்களை உருவாக்குவதற்கான வழிகளை கண்டறிவதும், பெருமளவிலான திறன் மேம்பாட்டினை மிக அதிகமான வேகத்தில் எட்டிப் பிடிப்பதை நோக்கமாகக் கொண்ட முன்முயற்சிகளும் அவசியமாகின்றன.
இத்தகையதொரு மாற்றத்தை மேலும் தீவிரப்படுத்தவும், புதிய தளவாடத் துறையில் இளம் இந்தியாவை உருவாக்கவும், வலுவானதொரு திறன் மேம்பாட்டு திட்டத்தை வடிவமைக்க அரசு, கல்வி நிறுவனங்கள், சமூக நிறுவனங்கள் மற்றும் தொழில்துறை ஆகியவை ஒன்றிணைந்து செயல்பட வேண்டியது அவசியமாகும்.