நிலக்கரியிலிருந்து எரிவாயு தயாரித்தல் : இந்தியாவின் எரிசக்தி சுதந்திரம் மற்றும் தற்சார்பு இலக்குகளை அடைவதற்கான திட்டம்
—- தேவ் காவஸ்கர்
உலகப் பொருளாதாரத்தில் வல்லரசாக மாறவேண்டும் என்ற இந்தியாவின் தொலைநோக்குத் திட்டம், தற்சார்பு, உள்நாட்டு வளங்களை வளமாக்குதல், மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய புதுமை, இறக்குமதியைக் குறைத்து வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் போன்றவற்றே பொருத்தே சாத்தியமாகும். அதே வேளையில் வரும் தசாப்தங்களில் கார்பன் பயன்பாடு இல்லாத நீடித்த பொருளாதாரத்தை ஏற்படுத்துவதும் நோக்கமாக இருக்க வேண்டும்.
இந்தியாவில் சூரியசக்தி, உயிரிக்கழிவுகள் மற்றும் நிலக்கரி போன்ற இயற்கை வளங்கள் அபரிதமாக கிடைக்கிறது. இதன் மூலம் சூரிய சக்தி உற்பத்தி மற்றும் உயிரிக்கழிவு சார்ந்த தொழில்நுட்ப ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணிகளில் இந்தியா வியத்தகு முன்னேற்றம் அடைந்துள்ளது. இந்தியாவில் 307 பில்லியன் டன் அளவிற்கு நிலக்கரி இருப்பு உள்ள நிலையில், லிக்னைட் (பழுப்பு நிலக்கரி) உள்பட 55% நிலக்கரி அனல்மின் நிலையங்களில் மின் உற்பத்திக்கான எரிபொருளாகவே பயன்படுத்தப்பட்டு வருகிறது.
பருவநிலை மாற்றம் குறித்த பாரீஸ் உடன்படிக்கையில் இந்தியா கையெழுத்திட்டுள்ளதால் தூய்மையான எரிசக்திக்கான வாய்ப்புகளை ஆராய வேண்டியது அவசரத் தேவையாகியுள்ளது. எனவே, அபரிமிதமாக கிடைக்கும் நிலக்கரியை மாற்றும் முறையில் பயன்படுத்துவதும் அவசியமானதாகிறது. அதன்படி, நிலக்கரியை எரிப்பதற்கு பதிலாக, அதனை எரிவாயுவாக மாற்றிப் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. நிலக்கரியை நீராவி மற்றும் ஆக்சிஜனுடன் ரசாயன வினைகளுக்கு உட்படுத்தி, கார்பன் மோனாக்ஸைடு (CO), ஹைட்ரஜன் (H2), மற்றும் கரியமில வாயு (CO2) ஆகியவற்றின் கலவையான சின்கேஸ் எனப்படும் எரிவாயுவை
உற்பத்தி செய்து பின்னர் அதிலிருந்து செயற்கை இயற்கை எரிவாயு, மெத்தனால். எத்தனால் போன்ற எரிபொருட்கள் மற்றம் உர உற்பத்திக்குத் தேவைான அம்மோனியா போன்றவற்றை தயாரிக்கலாம் . இதன் மூலம் பிளாஸ்டிக்கைக் கூட தயாரிக்கலாம்.
இதன் மூலம் தற்போது ஆண்டுக்கு 185 மில்லியன் மெட்ரிக் டன் அளவுக்கு பெட்ரோலியப் பொருட்கள் இறக்குமதி செய்வதைக் குறைப்பதன் வாயிலாக அந்நிய செலாவணியை சேமிக்க இயலும் என்பதோடு தற்சார்பும் அடையலாம்.
2030ஆம் ஆண்டுக்குள் நாட்டில் 20% எத்தனால் கலந்த பெட்ரோல் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதால் வழக்கமான முறையில் கரும்புச் சாறிலிருந்து எத்தனால் தயாரிக்கப்படுவதற்கு பதிலாக உயிர்க்கழிவுகள், நகராட்சிக் கழிவுகள், வனம் மற்றும் விவசாயக் கழிவுகள், வீணாகும் உணவு தானியங்களைப் பயன்படுத்தியும் இரண்டாம் தலைமுறை எத்தனால் தயாரிப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதன் காரணமாக எரிசக்தித்துறையில் இந்தியா தற்சார்பை அடைவதோடு சுதந்திரமான தொலைநோக்கு திட்டங்களையும் உருவாக்க முடியும்.