டிஜிட்டல் பல்கலைக்கழகம்: கற்றலை ஒருங்கிணைத்தல் அனைவரையும் உட்படுத்துவதை நடைமுறைப்படுத்துதல்
பேராசிரியர் ராகவேந்திர பி. திவாரி,
துணை வேந்தர்,
பஞ்சாப் மத்திய பல்கலைக்கழகம், பத்தின்டா
கற்றுக் கொள்பவர்களின் பன்முகத் தேவைகளும், விருப்பங்களும் அதிகரித்து வருவதை ஈடுகட்ட கல்விமுறை அனைவரையும் உட்படுத்தியதாக மாற்றம் கொண்டதாக இருக்க வேண்டும். இந்தச் சூழலில் தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்பம் சிறந்த பயன்பாடு கொண்டதாகவும் அதே சமயம் குறைபாடு உள்ளதாகவும் இருக்கிறது. இந்த தொழில்நுட்பத்தை நாம் சரியாக எடுத்துக் கொண்டால் அது பயன்பாடு மிக்கதாக இருக்கும். நாம் பின்தங்கியிருந்தால் அது குறைபாடு உள்ளதாக மாறும்.
டிஜிட்டல் அல்லது இணையவழி கல்வி என்பது உலகம் முழுவதும் கற்றலிலும், கற்பித்தலிலும் மிக ஆற்றல் மிக்க முறையாக குறிப்பாக கொரோனா பெருந்தொற்று காலத்திற்குப் பின் உருவாகி வருகிறது. கல்வி நிலையங்கள் மூடப்பட்டதன் காரணமாக ஏற்படும் கற்றல் இழப்பை இணையவழி கற்றல் கணிசமாகக் குறைக்கிறது. இணையவழி கற்பித்தலுக்கான கருவிகள் சதவீதத்தை 20-லிருந்து 40 ஆக உயர்த்த பல்கலைக்கழக மானியக் குழுவை கொரோனா பெருந்தொற்று தூண்டியுள்ளது.
சமவாய்ப்பு, தரம், எளிதில் பெறுதல், மொத்த செயற்கையை அதிகரித்தல் போன்றவற்றுக்கு கல்வி அமைச்சகம் பல வகையான தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்ப முயற்சிகளை தொடங்கியுள்ளது. ஸ்வயம், ஸ்வயம்ப்ரபா, ஷோத்கங்கா, இ-ஷோத்சிந்து, இ-யாத்ரா, வித்வான் உள்ளிட்டவை இதில் அடங்கும்.
கற்றல் முறையில் எதிர்கால வளர்ச்சிப் பாதையை கவனத்தில் கொண்டு மத்திய அரசு 2020 மே 17 அன்று பல திட்டங்களை அறிவித்தது. டிஜிட்டல் முறையிலான கல்விக்கு பல வகையான நிகழ்ச்சிகளைக் கொண்ட பிரதமரின் இ-வித்யா உள்ளிட்ட திட்டம் தொடங்கப்பட்டது. இதில் தீக்ஷா (ஒரே நாடு – ஒரே டிஜிட்டல் தளம்) ஒரே வகுப்பறை – ஒரே அலைவரிசை (12 ஆம் வகுப்பு வரை) மாற்றுத் திறன் கொண்ட மாணவ சமுதாயத்திற்கு தனித்துவமான இ-உள்ளடக்கங்கள், வானொலி சமூக வானொலிப் பயன்பாடு, உயர்நிலைக்கல்விக்கு இ-டியுட்டரிங் ஆகியவை இணைக்கப்பட்டுள்ளன.
டிஜிட்டல் பல்கலைக்கழகம் அமைப்பது பற்றி 2022 பிப்ரவரி 1 அன்று திருமதி. நிர்மலா சீதாராமன் வெளியிட்ட அறிவிப்பை தொடர்ந்து டிஜிட்டல் முறையில் கற்றலுக்கு மிகப் பெரிய தயாரிப்பில் அரசு உள்ளது. நாடு முழுவதும் உள்ள மாணவர்களுக்கு அவர்களின் இல்லங்களிலேயே தனிப்பட்ட முறையில் கற்றல் அனுபவத்தை தருவதுடன் உலகத்தரத்தில்
அனைவருக்கும் கல்வி வழங்குவதாக இந்தப் பல்கலைக்கழகம் அமையும் என்றும் அவர் தெரிவித்தார்.
சமூக – பொருளாதாரப் பின்னணியில் பல்வேறு நிலையில் வாழும் மாணவ சமூகத்தினரின் பலவகையான தேவைகளைப் பூர்த்தி செய்ய இணையவழி கற்றலில் 3 முறைகளையும் பின்பற்ற வேண்டும் என்பது உத்தேச டிஜிட்டல் பல்கலைக்கழகம் குறித்த எனது கருத்தாகும். இதில் கூடுதல் பயன் என்பது தாங்கள் இடம்பெயராமலேயே வீட்டிலிருந்தபடி மாணவர்கள் பட்டதாரியாக முடியும். மேலும் இணையதள ஆதாரங்கள் நூலகமாகவும், பாடநூல்களை உருவாக்கும் வசதி கொண்டதாகவும், தேவைப்படும் பாடநூல்களை பெறுவதற்கான இடமாகவும் இருக்கும்.
இருப்பினும் இணையவழி கற்றலின்போது மாணவர்களின் கவனத்தை ஒரே இடத்தில் குவிப்பது மிகவும் சிரமமான ஒன்று என்ற எச்சரிக்கை உணர்வும் தேவைப்படுகிறது. இணையவழி கற்பவர்கள் வசதியாக தங்கள் வீடுகளிலேயே இருக்கும் சூழலில் அவர்களின் கவனத்தை கணினி திரையில் நிலைக்கச் செய்வதற்கான வழிகளை ஆசிரியர்கள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திக் கண்டறிய வேண்டும். பாடங்களை தனித்தனியாக பயிற்றுவிப்பது சிறிய இடைவேளைகளை தருவது ஆகியவை மாணவர்களின் கவனம் சிதையாமல் இருக்க உதவும்.
கற்றலை ஒருங்கிணைக்கவும், அனைவரையும் டிஜிட்டல் முறையில் ஈடுபடுவதை நடைமுறைப்படுத்தவும் ஏழை, பணக்காரர் அனைவரும் சமம் என்ற எதிர்காலத்தில் உருவாக்கவும் டிஜிட்டல் பல்கலைக்கழகம் தேசத்திற்கு மிகப் பெரிய வாய்ப்பாகும். அதே சமயம் இணையவழி கல்வி என்பது குழு விவாதம், மாணவர்களின் கருத்தரங்கு, வீட்டுப்பாடம் ஆய்வுப் பணி, நேர்முகப் பயிற்சி, கள ஆய்வு, கல்விச் சுற்றுலா போன்ற பழைய கல்வி முறையின் வடிவத்தையும் கலந்ததாக இருக்க வேண்டும். இவ்வாறான கருத்துருவாக்கப்பட்டு கவனத்துடன் வளர்க்கப்பட்டால் டிஜிட்டல் பல்கலைக்கழகம் என்பது தேசிய கல்விக் கொள்கை 2020-ல் முன்மொழியப்பட்டுள்ளது போல் தற்போதைய கற்றல் முறையில் சக்திமிக்க மாற்றத்தைக் கொண்டு வரும்.