இந்தியா – ஐக்கிய அரபு அமீரக வர்த்தகம் – வளமைக்கான புதிய சகாப்தம்
மத்திய வர்த்தக – தொழில் துறை அமைச்சர் திரு. பியூஷ் கோயல் மற்றும் ஐக்கிய அரபு அமீரக வெளிவர்த்தக இணையமைச்சர் டாக்டர். தானி பின் அகமது அல் செயூடி ஆகியோர் கூட்டாக வெளியிட்ட கட்டுரை.
சிறப்பான எதிர்காலத்திற்கு பகிர்ந்து கொள்ளப்பட்ட தொலைநோக்கு
2021-ஐ திரும்பி பார்த்தாலும் 2022-ஐ நோக்கிச் செல்லும் போதும், நமது இருநாடுகளும் வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றத்தைக் காணும் நிலையில் இருப்பது தெளிவாகத் தெரியும். ஐக்கிய அரபு அமீரகம், தனது 50 ஆவது ஆண்டு நிறுவன தினத்தை கொண்டாடும் வேளையில், அடுத்த 50 ஆண்டு கால வளர்ச்சிக்கான தொலைநோக்கு திட்டத்தை வகுத்துள்ளது. அதேபோன்று 75-ஆவது சுதந்திர தினத்தைக் குறிக்கும் விதமாக, சுதந்திரப் பெருவிழாவைக் கொண்டாடி வரும் இந்தியா, புத்தெழுச்சி மற்றும் உற்சாகத்துடன் தனது நீண்ட கால வளர்ச்சிப் பயணத்தை மேற்கொண்டுள்ளது.
நமது இருநாடுகளுக்கு இடையிலான நட்புறவை, விரிவான நீடித்த ஒத்துழைப்பு என்ற அளவுக்கு மேம்படுத்த இருநாடுகளின் தலைவர்களும் 2017 ஆம் ஆண்டு முடிவெடுத்தனர். அப்போது முதற்கொண்டு, நமது நட்புறவு, காலத்தால் அழிக்க முடியாததாக திகழ்வதோடு, ஒத்தகருத்துடன், ஆழமான பிணைப்பு மற்றும் புரிந்துணர்வு கொண்டதாகவும், வலுவான, பன்முகத்தன்மை கொண்ட இருதரப்பு ஒத்துழைப்பாக மலர்ந்திருப்பதன் மூலம் இருநாடுகளையும் சேர்ந்த லட்சக்கணக்கான மக்களின் வாழ்வில் ஆக்கப்பூர்வமான பயனை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சிறப்புமிக்க நட்புறவு, சிக்கலான மற்றும் நிச்சயமற்ற உலகில் எழக்கூடிய சவால்களை, குறிப்பாக கோவிட் 19 பெருந்தொற்றால் ஏற்பட்ட சவால்களை எதிர்கொள்ள உதவியது. தற்போது நம்மிடையேயான ஒத்துழைப்பும் நட்பின் ஆழமும் பல இன்னல்களுக்கிடையேயும் பரிமளித்தது. கோவிட்டிற்கு பிந்தைய காலக்கட்டத்தில் நமது ஒத்துழைப்பை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதற்கான தொலைநோக்குத் திட்டத்தை பகிர்ந்து கொண்டுள்ளோம்.
நீடித்த வளர்ச்சி, பருவநிலை மாற்ற செயல்பாடு, புதுமைக் கண்டுபிடிப்பு, டிஜிட்டல்மயமாக்கல், ஸ்டார்ட் அப், உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பு, சுகாதாரம், நிதி தொழில்நுட்பம் மற்றும் திறன்
மேம்பாடு போன்ற துறைகளில் வருங்காலத்தில் ஒருங்கிணைந்து செயல்பட சிறப்புக் கவனம் செலுத்தப்படும்.
இருதரப்பு வர்த்தகம் அடுத்த ஐந்தாண்டுகளில் 100 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு வளர்ச்சி அடையும். இது கோவிட்டிற்கு முந்தைய அளவை விட, இருமடங்காகும். மேம்பட்ட சந்தை அணுகுதல் வசதி, ஏற்றுமதியாளர்கள், இறக்குமதியாளர்கள், நுகர்வோர் போன்ற அனைத்துத் தரப்பினருக்கும் பயனளிப்பதுடன் இருநாடுகளிலும் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் வழிவகுக்கும்.
வைரம் மற்றும் நகைத் தயாரிப்பு, ஜவுளி, தோல், காலணித் தயாரிப்பு, பிளாஸ்டிக், வேளாண் பொருட்கள், பொறியியல் சரக்குகள் மற்றும் மருந்துப்பொருட்கள் தயாரிப்புத் துறையில் இந்திய தொழில்துறையினரின் சந்தை அணுகுமுறையை மேம்படுத்தவும் உதவிகரமாக இருக்கும்.
எரிசக்தித் துறையில் இருநாடுகளும் மிக நெருங்கிய நட்புறவுடன் திகழ்கின்றன. இதனை, தூய்மையான, பசுமையான எதிர்காலத்திற்கான எரிசக்தி மாற்றத்திற்கு கொண்டு செல்லவும் இருநாடுகளும் உறுதிபூண்டுள்ளன. 2022-ல் இந்தியாவின் ஏற்றுமதி 400 பில்லியன் அமெரிக்க டாலரை தாண்டும் என நம்புகிறோம்.