ஈர நிலங்கள் பாதுகாப்பு, கங்கைக்கு புத்துயிரூட்டல்
திரு.ஜி.அசோக் குமார்
தலைமை இயக்குனர், தூய்மையான கங்கைக்கான தேசிய இயக்கம்

குடியிருப்புகளில் தண்ணீர் தேவைகளைப் பூர்த்தி செய்யும் தனித்துவமான சுற்றுச்சூழல் பாதுகாப்பு இடங்களாக ஈர நிலங்கள் திகழ்கின்றன. ஏரிகள், ஆறுகளை போல இவையும் நன்னீர் அமைப்புகளாகும். கழிவு நீரை இயற்கையாகவே சுத்திகரிக்கும் திறன் கொண்டவையாக ஈர நிலங்கள் திகழ்கின்றன. இதனால் மாசு வெகுவாக குறைவதுடன், தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் அழிகின்றன. கார்பனைக் குறைக்கும் திறன் கொண்டதால் பருவநிலை மாற்ற பாதிப்புகளை வெகுவாக குறைப்பதில் ஈர நிலங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. மேலும் கோடிக்கணக்கானவர்களுக்கு அரிசியும், மீனும் வழங்கும் முக்கிய உணவு ஆதாரமாகவும் அவை திகழ்கின்றன.
உலக ஈர நில தினம் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 2-ந் தேதி கடைபிடிக்கப்படுகிறது. சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் நீர்நிலைகள் முக்கியப் பங்கு வகிப்பது குறித்து உலகளவில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்துடன் இந்த தினம் கடைபிடிக்கப்படுகிறது. 1971 ஆம் ஆண்டு பி்ப்ரவரி 2-ந் தேதி ஈரான் நாட்டில் ராம்சர் ஈர நிலங்கள் பாதுகாப்பு பிரகடனம் வெளியிடப்பட்டதை இந்த நாள் குறிக்கிறது. 2022-ஆம் ஆண்டின் உலக ஈர நில தினம் கருப்பொருள் மக்கள் மற்றும் இயற்கைக்கான ஈர நில நடவடிக்கை என்பதாகும்.
நிலத்தடி நீரைப் பாதுகாப்பதுடன் ஈர நிலங்கள், கனமழை காலங்களில் உபரி நீரை உறிஞ்சும் தன்மைக் கொண்டவையாக உள்ளன. உயிரி பன்முகத்தன்மையின் தண்ணீர் சேமிப்பை ஈர நிலங்கள் செய்வதால் ஏராளமான பறவையினங்கள் தங்கள் இனப்பெருக்கங்களுக்கு இவற்றை பயன்படுத்துகின்றன. ஈர நிலங்கள் சுற்றுலா வளம் கொண்டவையாக திகழ்வதால் மீன் பிடித்தல், வேட்டையாடுதல், பறவைக்காட்சி போன்ற கேளிக்கை நடவடிக்கைகளுக்கும் உகந்த இடங்களாக திகழ்கின்றன. தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க ஈர நில பாதுகாப்பு என்னும் இலக்கை ஐ.நா. நிர்ணயித்துள்ளது.
நதிகளின் புவியியல் இருப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு ஈர நிலங்கள் உதவுகின்றன. நதிகள் பாதுகாப்பு, குறிப்பாக கங்கை நதி பாதுகாப்பில் இது முக்கியப் பங்காற்றுகிறது. இந்தியாவின் 4.6 சதவீத நிலம் ஈர நிலங்களாகும். இது 15.26 மில்லியன் ஹெக்டேர் பரப்புக்கு விரிந்துள்ளது. இந்தியாவில் 47 இடங்கள் (ராம்சர் இடங்கள்) சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த ஈர நிலங்களாக கண்டறியப்பட்டுள்ளன. இதில் 21 இடங்கள் கங்கை படுகையில் உள்ளன. இதில் 9 உத்தரப்பிரதேசத்தில் உள்ளன.
உலகின் மிக அதிக முயற்சி கொண்ட நதி புத்துயிரூட்டல் திட்டமாக கங்கை புத்துயிரூட்டல் திட்டம் திகழ்கிறது. இதனுடன் ஈர நிலங்கள் பிரிக்க முடியாத அளவுக்கு தொடர்புள்ளவையாகும். ஆற்றுப்படுகை பிராந்தியத்திலிருந்து உபரி தண்ணீரை நீரோடைகளுக்கு அனுப்புவதில் ஈர நிலங்கள் முக்கியப் பங்காற்றி வருகின்றன. கங்கை படுகையில் 49 இடங்கள் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஈர நில இடங்களாக கண்டறியப்பட்டுள்ளன.

கங்கை புத்துயிரூட்டல் திட்டம் உலக வன உயிரின நிதி, இந்திய வன உயிரின நிறுவனம், மாநில ஈர நில ஆணையங்கள் போன்றவற்றின் ஒத்துழைப்புடன் செயல்படுத்தப்படுகிறது. அண்மைக் காலத்தில் ஈர நில பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு அதிகரித்துள்ளதால் சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்ற அமைச்சகம் முதல் முறையாக ஈர நில பாதுகாப்பு மற்றும் வேளாண்மை மையத்தை உருவாக்கியுள்ளது. சென்னையில் உள்ள நீடித்த கடலோர மேலாண்மைக்கான தேசிய மையத்தின் பகுதியாக இது செயல்படும். ஜல்சக்தி இயக்கம் மற்றும் ஜல் ஜீவன் இயக்கங்களால் இந்தியாவில் ஈர நில பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அதிகரித்துள்ளது. தண்ணீர் சேமிப்பை மக்கள் இயக்கமாக மாற்றுவதுடன் இந்தியாவில் ஒவ்வொரு வீட்டுக்கும் பாதுகாப்பான குடிநீர் வழங்குவதை இது நோக்கமாக கொண்டுள்ளது.
தண்ணீர், உணவு, பருவநிலை பாதுகாப்பு ஆகியவற்றுடன் நேரடி தொடர்புள்ள ஈர நிலங்களின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை பரப்புவது இன்றைய தேவையாகும். இவற்றை பாதுகாக்க மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது. உலக ஈர நில தினத்தில் நமது ஈர நிலங்களைப் பாதுகாத்து இந்தியாவை தண்ணீர் நிறைந்த நாடாக உருவாக்குவோம்.

By V.BALAMURUGAN 9381811222

Arasumalar.com Amtv.asia Arjunatv.in மக்கள் வெளிச்சம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *