மத்திய பட்ஜெட் ஆல் மாநிலங்கள் வளர்ச்சி அடையுமா…?
விவரிக்கிறார் டி.வி.சோமநாதன்
தற்காலத்திற்குரிய ‘சமச்சீரான பட்ஜெட்’
திரு. டி.வி.சோமநாதன்
மத்திய அரசின் நிதித்துறை செயலாளர்
நாடாளுமன்ற ஜனநாயகத்தில் பட்ஜெட்கள் பல நோக்கங்களை நிறைவேற்றுகின்றன. இவை வருடாந்தர நிதி நிலைமையை தெரிவிப்பவை. இவை வழக்கமானது என்றாலும் முக்கியமானவை. தனியார் துறை போல அரசுகள் தங்களின் வாடிக்கையாளர்களை தெரிவு செய்ய இயலாது. அவை அனைவருக்கும் பணியாற்றுவது அவசியம். எனவே தேவை அதிகம். இந்த காரணங்களுக்காக பட்ஜெட் தயாரிப்பது என்பது மிகவும் சிக்கலான சமநிலையை பராமரிக்கும் செயலாகும்.
2022-23-க்கான பட்ஜெட்டில் மிகப்பெரிய நோக்கம் வேளாண்மை, சுகாதாரம், கல்வி, நலத்திட்டங்கள் ஆகியவற்றுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்துக் கொண்டே பொது முதலீட்டைப் பெருமளவு அதிகரிப்பதன் மூலம் வளர்ச்சியையும், வேலை வாய்ப்பையும் அதிகரிப்பதாகும். இதற்காக மூலதனச் செலவு 35 சதவீத அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த மூலதனச் செலவு நேரடியாகவும், மறைமுகமாகவும் லட்சக்கணக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்கும். பிரதமரின் விரைவு சக்தி திட்டம், அடிப்படை கட்டமைப்பு விரிவாக்கத்தில் அளவு மாற்றத்தை மட்டும் நோக்கமாக கொண்டதல்ல, சிறந்த திட்டமிடல் மூலம் குணமாற்றத்தையும் ஏற்படுத்துவதாகும். சாலை, ரயில், துறைமுகம், மெட்ரோ ரயில் ஆகியவற்றுக்கிடையே முறையான ஒருங்கிணைப்பு இருப்பதில்லை. ஆனால் தற்போது ஒருங்கிணைக்கப்பட்ட திட்டமிடலும், செயல்பாடும் கணிசமான அளவு உள்நாட்டு உற்பத்தி திறனையும், ஏற்றுமதி போட்டித் தன்மையையும் அதிகரிக்கும்.
இந்த பட்ஜெட்டின் சிறப்பம்சங்களில் ஒன்றாக முன்னெப்போதும் இல்லாத வகையில் மாநிலங்களின் வழக்கமான கடன் உச்சவரம்புக்கு அப்பால் அவற்றின் மூலதனச் செலவுக்கு வட்டி இல்லாமல் 50 ஆண்டுகால கடனாக ரூ. 1 லட்சம் கோடி நிதி உதவித் திட்டம் அமைந்துள்ளது. குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு கடன் உத்தரவாத திட்டத்தின் கீழ் புதிய கடன்களுக்கு ரூ.2 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. பிரதமரின் கிராம சாலை திட்டத்திற்கான ஒதுக்கீடு 27 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
உர மானியங்கள், உணவு தானிய கொள்முதல் உள்பட வேளாண் துறைக்கு போதிய ஆதரவு அளிக்கப்பட்டுள்ளது. தேசிய சுகாதார இயக்கம், ஆயுஷ் திட்டங்களுக்கு அப்பால் பிரதமரின் தற்சார்பு இந்தியா சுகாதாரக் கட்டமைப்பு என்ற புதிய திட்டம் இந்தியாவின் சுகாதார மேம்பாட்டு திறனை நிரந்தரமாக அதிகரிக்க உதவும். நிதி ஆணையத்தின் பரிந்துரைகளுக்கு ஏற்ப மத்திய அரசு ஆதரவிலான 130 திட்டங்கள் மறுசீரமைக்கப்பட்டு, 65 திட்டங்களாக மாற்றப்பட்டுள்ளன. இவை அதிகபட்ச நெகிழ்வுப் போக்கோடும், தாக்கத்தோடும் இருக்கும்.
உள்நாட்டு ரயில்வே தொழில்நுட்பம், வேளாண்மைக்கான கிசான் ட்ரோன்ஸ், டிஜிட்டல் சுகாதார தகவல், ட்ரோன் சேவை, மின்னணு பாஸ்போர்ட்டுகள், டிஜிட்டல் கரன்சி, மின்களம் மாற்றுதல் போன்றவற்றுடன் இந்த பட்ஜெட் 2047-ல் இந்தியாவுக்கான கொள்கை முன் முயற்சிகளையும், நிதி ஒதுக்கீடுகளையும் கொண்டுள்ளது.
‘வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால் மையத்து நாடுகளைப் பயிர் செய்குவோம்’ என்ற சுப்பிரமணிய பாரதியாரின் தொலைநோக்கு கனவு அவர் மறைந்த 100 ஆண்டுகளுக்கு பின் நதிகள் இணைப்பு திட்டத்தின் மூலம் நிறைவேறத் தொடங்கியுள்ளது.
பெருந்தொற்று தொடர்பான செலவுகள், பங்குகள் விற்பனையில் தேக்கம், அதிகபட்ச வருவாய் வளர்ச்சி, செலவினக் கட்டுப்பாடு ஆகியவை காரணமாக 2021-22-க்கான நிதிப் பற்றாக்குறை ஜிடிபி-ல் 9 சதவீதமாக நீடிக்கிறது. ஒரே ஆண்டில் இந்த அளவிற்கு அதிகபட்சமாக நிதிப் பற்றாக்குறை குறைக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு இது ஜிடிடி-ல்
6.4 சதவீதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வருவாய் பற்றாக்குறை 4.7 சதவீதத்தில் இருந்து 3.8 சதவீதமாக குறையும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.