மத்திய பணிக்கு செல்லவேண்டிய அதிகாரிகளின் எண்ணிக்கை கடுமையான வீழ்ச்சி
குடிமைப் பணிக்கான விதிகள்
மாநிலங்கள் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகளுடன் கலந்தாலோசிப்பதன் மூலம் மத்தியப் பணியில் ஏற்பட்ட சரிவுக்கு மத்திய அரசு தீர்வுகாண வேண்டும்
கேஎம் சந்திரசேகர்டிகேஏ நாயர்
ஐஏஎஸ் அதிகாரிகளை மத்தியப் பணிக்குத் தேர்வு செய்யும் விதிகளில் மத்திய அரசின் உத்தேச திருத்தங்களுக்கு மேற்குவங்க முதலமைச்சரும் இதர மாநிலங்களும் கடும் அதிருப்தியை தெரிவித்தது இந்திய ஆட்சிப் பணி குறித்த தலைப்புச் செய்திகளாக வெளியாயின. சிறப்பான நிர்வாகம் மற்றும் கூட்டாட்சி உணர்வின் நலனுக்காக, விதிகளில் கடுமையான மாற்றங்கள் செய்வதற்குமுன் மாநிலங்களுடன் கலந்தாலோசிக்கும் நடைமுறை தேவைப்படுகிறது.
பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் மத்திய அரசால் தெரிவு செய்யப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டு பல்வேறு மாநில மாநிலங்களுக்கு ஒதுக்கப்படுகிறார்கள். எனவே ஐஏஎஸ் அதிகாரிகள், அவர்கள் சார்ந்த மாநில அதிகாரிகளாக மட்டுமின்றி மத்திய அரசுக்குத் தேவையெனில் அந்தப் பணிக்கும் செல்லவேண்டியுள்ளது. இதனால் ஐஏஎஸ் அதிகாரிகள் அவர்கள் சார்ந்த மாநில அரசுகள் மற்றும் நியமன அதிகாரம் கொண்ட மத்திய அரசு என இரட்டைக் கட்டுப்பாட்டில் இருக்கிறார்கள்.
இந்திய ஆட்சிப் பணி விதிகளில் திடீர் மாற்றங்கள் செய்யப்படுவதற்குக் காரணம் மத்திய பணிக்கு செல்லவேண்டிய அதிகாரிகளின் எண்ணிக்கை கடுமையான வீழ்ச்சியைக் கண்டுள்ளது. 2014ல் ஒதுக்கப்பட்டிருந்த 69% என்பதிலிருந்து 2021ல் 30% ஆகிவிட்டது. உண்மையில் இது மிகவும் கடுமையான வீழ்ச்சிதான்.
ஆனால் விதிகளில் கடுமையான மாற்றங்களைக் கொண்டுவருவதற்கு பதிலாக மத்திய அரசு முதலில் சம்பந்தப்பட்டவர்களுடன் கலந்தாலோசிக்க வேண்டும்.மேலும் மத்திய அரசு பணி என்பது கடந்த காலத்தில் இருந்தது போல் அவ்வளவு பிரபலமாக இல்லாததற்கான காரணங்களை ஆய்வு செய்ய வேண்டும்.
மேலும் அடித்தள நிலையிலான நிர்வாகம் முழுவதும் மாநிலங்களைச் சார்ந்தே உள்ளன என்பதை மத்திய அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். மத்திய அரசு திட்டங்கள் கூட பெரும்பாலும் மாநில அரசுகள் மூலமே நிறைவேற்றப்படுகின்றன. மாநிலங்களிலிருந்து அதிகாரிகளைக் கட்டாயமாகவும் உடனடியாகவும் மத்தியப் பணிக்கு
மாற்றுவது மிகவும் இடையூறாக இருப்பது மட்டுமின்றி மாநில நிர்வாகத்திலும் குறையை ஏற்படுத்தும்.
எனவே மத்திய அரசு மாநிலங்களுடன் கலந்தாலோசிப்பது நல்லது. அதிகாரிகளுடனும் இது பற்றி விரிவாகவும் ஆழமாகவும் பேச வேண்டும். மத்திய அரசுப் பணிக்கு பல்வேறு நிலைகளில் ஐஏஎஸ் அதிகாரிகளின் தேவையை உறுதிசெய்ய இந்தத் திருத்தங்கள் தேவையா என்பதை முடிவு செய்ய வேண்டும்.அதிகாரம் மற்றும் பொறுப்பைக் குறைத்து மதிப்பிடாமல் மாநிலங்களின் செயல்பாட்டுத் திறனையும் அதிகாரிகளுக்கு ஏற்படும் தேவையற்ற பிரச்சனைகளையும் அவர்களின் குடும்பங்களுக்கான சிரமங்களையும் கணக்கில் கொள்ள வேண்டும்.
இறுதியாக, ஒத்துழைப்புடனான கூட்டாட்சி என்பதில்தான் தீர்வு உள்ளது. 2015ல் பர்ன்பூர் நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், “நமது அரசியல் சட்டம் நமக்குக் கூட்டாட்சி வடிவத்தைத் தந்துள்ளது. ஆனால் சோகம் என்னவென்றால், மத்திய மாநில உறவுகள் நீண்டகாலமாக பதற்றத்திலேயே இருந்தன. நான் ஒரு முதலமைச்சராக இருந்திருப்பதால் இது விரும்பத்தக்கதல்ல என்பதை நான் அறிவேன்.. ஆகவேதான் ஒத்துழைப்புடனான கூட்டாட்சி தத்துவத்தை மனதில்கொண்டு நாங்கள் மாற்றத்தைக் கொண்டுவந்திருக்கிறோம்… எனவே நான் இந்திய அணி என்று கூறுகிறேன்… இந்திய அணி அணுகுமுறை இல்லாமல் நாடு முன்னேற முடியாது.”
கேஎம் சந்திரசேகர்இந்திய அரசின் முன்னாள் அமைச்சரவை செயலர்டிகேஏ நாயர், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு முதன்மைச் செயலாரகப் பணியாற்றியவர்,