தேசிய பெண் குழந்தைகள் தினம்
பிரதமர் அவர்கள் பெண்களுக்கு பாதுகாப்பு தலைவராக உள்ளார்
தேசிய பெண் குழந்தைகள் தினம்: புதிய இந்தியாவை கட்டமைப்பவர்களுக்கு அதிகாரமளித்தல்,
ரேகா ஷர்மா,
தலைவர், தேசிய மகளிர் ஆணையம்
சுதந்திரத்தின் 75-வது ஆண்டு விழாவை கொண்டாடும் இந்த வேளையில், பெண் குழந்தைகளுக்கு அதிகாரமளித்தல் இந்தியாவின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானது என்பது அனைவரும் ஒப்புக்கொள்ளும் கருத்து. மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தற்போதைய அரசு, பெண் குழந்தைகளுக்கு அதிகாரமளிப்பதற்கு தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது.
பெண்கள் தங்கள் திறனை உணர்ந்து, அவர்களின் தலைமைப் பண்புகளை வெளிப்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கும் புதிய இந்தியாவை நாம் காண்கிறோம். பெண்களின் வளர்ச்சியில் இருந்து ‘பெண்கள் தலைமையிலான வளர்ச்சிக்கு’ இந்தியா மாறுகிறது. மேலும், நமது பிரதமரின் இந்த புரட்சிகர லட்சியத்தில், பெண்களின் உண்மையான திறனை உணர்ந்து தேசத்தின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கு பங்களிப்பதற்கான வாய்ப்புகளுடன்
புதிய இந்தியாவின் தலைவர்களாக பெண்கள் மீண்டும் உருவாகி வருகின்றனர்.
கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் அதிகாரமளித்தல் ஆகியவற்றில் பெண்களின் சம அணுகலை மேம்படுத்துவதற்கான திட்டங்களை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. சமூகத்தில் உறுதியான மாற்றங்களைக் கொண்டுவருவதற்கான மிக முக்கியமான காரணியாக பொதுமக்களின் மனநிலையை மாற்றுவது விளங்குகிறது. அரசின் ‘பெண் குழந்தையை பாதுகாப்போம், பெண் குழந்தையை கற்பிப்போம்’ (BBBP) திட்டத்தால் கொண்டு வரப்பட்ட மாற்றம் சமூகத்தில் பிரதிபலிக்கிறது.
பெண் குழந்தைகளின் பிறப்பு மற்றும் உரிமைகள் தொடர்பாக சமூகத்தில் நடத்தை மாற்றத்தைக் கொண்டுவரும் நோக்கத்துடன் மாண்புமிகு பிரதமரால் இத்திட்டம் தொடங்கப்பட்டது. பெண் குழந்தைகளிடையே கல்வி இல்லாமை மற்றும் பெண் சிசுக்கொலை போன்ற முக்கியமான பிரச்சினைகளை இத்திட்டம் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. பெண் குழந்தைகளுக்கு எதிரான எண்ணங்களை மாற்றுவதற்கு சமூக மட்டத்தில் மக்களை ஈடுபடுத்துவது மற்றும் பெண் குழந்தையை கொண்டாட புதுமையான நடைமுறைகளை அறிமுகப்படுத்துவதில் இந்த திட்டம் கவனம் செலுத்துகிறது.
சமூகத்தில் பாலினப் பாகுபாடு அதிகமாக இருப்பதைப் பற்றி மக்களுக்கு இத்திட்டம் உணர்த்தியது. சமூக வேறுபாடுகளைக் களைவதிலும் பாலின சமத்துவ சமுதாயத்தை உருவாக்குவதிலும் உள்ள பங்கை சமூகத்திற்கு உணர்த்துவதையும் இத்திட்டம் உறுதி செய்துள்ளது.
‘தூய்மை இந்தியா, தூய்மை பள்ளி’ இயக்கம் அரசால் தொடங்கப்பட்டது. மாணவிகளிடையே இடைநிற்றல் விகிதங்களைக் குறைப்பதற்காக இந்தியாவில் உள்ள ஒவ்வொரு பள்ளியிலும் தூய்மை வசதிகள் கிடைப்பதை உறுதி செய்யவும் பெண்களுக்கு தனி கழிப்பறைகள் கட்டப்படுவதிலும் இத்திட்டம் கவனம் செலுத்துகிறது.. பெண்கள் தங்கள் கல்வியை நிறைவு செய்வதை உறுதி செய்வதற்காக அவர்களின் கற்றல் மற்றும் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு இது வழிவகுக்கும்.