ரூ 20 கோடி உற்பத்தி பாதிப்பு கண்டுகொள்ளுமா அரசாங்கம்…?
விசைத்தறி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் காரணமாக சுல் தான்பேட்டையில் ரூ.20 கோடி உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது. அவர்கள் குடும்பத்துடன் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க முடிவு செய்து உள்ளனர்.
விசைத்தறி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் காரணமாக சுல் தான்பேட்டையில் ரூ.20 கோடி உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது. அவர்கள் குடும்பத்துடன் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க முடிவு செய்து உள்ளனர்.
கோவை, திருப்பூர் மாவட்டத்தில் 2 லட்சம் விசைத்தறிகள் உள்ளன. இந்த விசைத்தறி உரிமையாளர்களுக்கு, ஜவுளி உற்பத்தியாளர்கள் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை கூலி உயர்வு வழங்கி வந்தனர். கடந்த 2014-ம் ஆண்டு முதல் கூலி உயர்வு வழங்கவில்லை.
இந்த நிலையில், புதிய கூலி உயர்வு கடந்த டிசம்பர் 1-ந் தேதி முதல் அமல்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. அதன்படி சோமனூர் ரகங்களுக்கு 23 சதவீதமும் மற்ற ரகங்களுக்கு 20 சதவீதம் கூலி உயர்வு வழங்க தீர்மானம் செய்யப்பட்டது. ஆனால் கூலி உயர்வை அமல்படுத்தவில்லை.
இதையடுத்து கோவை, திருப்பூர் மாவட்ட விசைத்தறி உரிமை யாளர்கள் கடந்த 9-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். கோவை மாவட்டத்தில் உள்ள சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் மட்டும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் உள்ளன.
இதில் நேரடியாக மற்றும் மறைமுகமாக 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பயன்பெற்று வருகிறார்கள். இந்த ஒன்றியத்தில் தினமும் ரூ.1½ கோடிக்கு உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. ஆனால் வேலைநிறுத்த போராட்டம் காரணமாக தினமும் ரூ.1½ கோடிக்கு இழப்பு ஏற்பட்டு உள்ளது.
இது குறித்து விசைத்தறி உரிமையாளர்கள் கூறியதாவது:-
சுல்தான்பேட்டை பகுதியில் வேலை நிறுத்த போராட்டம் காரணமாக கடந்த 9-ந் தேதி முதல் இதுவரை ரூ.20 கோடி உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் கடந்த 20-ந் தேதி நடந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்து உள்ளது. இதையடுத்து மீண்டும் வருகிற 27-ந் தேதி பேச்சுவார்த்தை நடக்கிறது.
இதற்கிடையில்,தங்களின் கோரிக்கையை தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் கோவை அருகே உள்ள காரணம்பேட்டை நால்ரோடு பகுதியில் காலை 10 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இதில் குடும்பத்துடன் பங்கேற்க உள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.