ரயில்வே துறையில் பணமாக்கும் நடவடிக்கை, அவசியமான மாற்றத்தை ஏற்படுத்தும்
மிகப்பெரும் மாற்றங்களை ஏற்படுத்தும் நோக்கில், ஏப்ரல் 23, 2021-ல் மத்திய அரசு அறிவித்த தேசிய பணமாக்கல் திட்டமானது, இதனால் ஏற்படும் தாக்கங்கள் குறித்த மிகப்பெரும் விவாதங்களையும், ஆலோசனைகளையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தத் திட்டத்தின்மூலம், ரயில்வே துறையில் ரூ.1.5 லட்சம் கோடி வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒட்டுமொத்தமாக தேவைப்படும் 6 லட்சம் கோடி ரூபாயில் 25 சதவீதமாகும். சொத்தினை பணமாக்குதல் என்பது, எந்தவொரு அரசின் சொத்துக்களையும் விற்பனை செய்யாமல், நாட்டில் புதிய கட்டமைப்பை ஏற்படுத்துவதற்காக கூடுதல் மூலதனத்தை திரட்டுவதற்கான வழிவகை ஆகும். அரசிடம் உள்ள சொத்துக்களை தனியாருக்கு குத்தகைக்கு விடுவது மற்றும் கட்டமைப்பை நிர்வகிப்பதற்கான வழிமுறைகளை மட்டுமே தேசிய பணமாக்குதல் திட்டம் வழங்குகிறது.
67,368 கி.மீ., வழித்தடத்தில் ஒட்டுமொத்தமாக 1,21,407 கிலோமீட்டர் தொலைவுக்கான தண்டவாளம் மூலம், அளவு அடிப்படையில் உலகின் 4-வது மிகப்பெரும் ரயில்வே-வாக இந்திய ரயில்வே திகழ்கிறது. இதில், 13 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். சுதந்திரம் பெற்றது முதலே, அரசின் உதவியையே ரயில்வே துறை சார்ந்திருக்கும் நிலையில், மூலதன செலவிற்காக போதிய நிதியை உருவாக்குவது என்பது சவாலாக இருந்தது.
தேசிய பணமாக்கல் திட்டத்தை சிறப்பான முறையில் செயல்படுத்துவதன் மூலம், அதிக அளவில் நிதி கிடைப்பது உறுதிப்படுத்தப்படும். இதன்மூலம், கட்டமைப்பை பெருமளவில் மேம்படுத்த முடியும். பயணிகள் ரயில்களுக்கான போக்குவரத்து செயல்பாடுகளை மேம்படுத்த முடியும். ரயில் நிலையங்கள், சரக்கு முனையங்கள், ரயில்வே காலனிகள், ரயில்வே தண்டவாளங்கள் ஆகியவற்றை சீரமைக்க முடியும். இந்த சூழலில், சுதந்திரம் பெற்றதுமுதலே, நமது ரயில்வே துறையின் ஏராளமான சொத்துக்கள், பயன்படுத்தப்படாமலோ அல்லது குறைவான அளவில் பயன்படுத்தப்பட்டோ உள்ளது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ரயில்வே தண்டவாளங்களை ஒட்டியுள்ள நிலங்களை,
கேபிள்களை பதிப்பதற்காக தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு குத்தகைக்கு விட முடியும். 2023-ம் ஆண்டுக்குள் ரயில்வே துறையை 100% மின்மயமாக்குவது, 2030-ம் ஆண்டுக்குள் கார்பன் வாயு வெளியேற்றம் இல்லாத சூழலை ஏற்படுத்துவது, டிக்கெட் முன்பதிவை எளிதாக்குவது, ஆன்லைன் சரக்கு போக்குவரத்து சேவைகள் போன்ற அரசு நிர்ணயித்த மிகப்பெரும் இலக்குகளை நிறைவேற்ற தனியார் துறையின் பெருமளவிலான முதலீடுகள் வழிவகை செய்யும். நிதிஆயோக் அமைப்பின் மதிப்பீட்டின்படி, 2022-ம் நிதியாண்டு முதல் 2025-ம் நிதியாண்டு வரையான காலத்தில் ரயில்வே கட்டமைப்பு மேம்பாட்டுக்காக ரூ.76,250 கோடியும், பயணிகள் ரயில் இயக்கத்துக்காக ரூ.21,642 கோடியும் பணமாக்கல் நடவடிக்கை மூலம் பெற திட்டமிடப்பட்டுள்ளது.
முக்கியமாக, சொத்து பணமாக்கல் நடவடிக்கை என்பது படிப்படியாக மேற்கொள்ளப்பட உள்ளது. ரயில்வே துறையில் பணமாக்கல் நடவடிக்கை என்பது, இந்தத் துறை எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து விரிவான ஆய்வுக்குப் பிறகே மேற்கொள்ளப்பட உள்ளது.