தனது ஊரில் தான் படித்த அரசுப்பள்ளியில் தனது சொந்த பணம் ரூ 2 இலட்சம் செலவில் ஸ்மார்ட் வகுப்பறை மற்றும் ஸ்மார்ட் டிவி ஏற்படுத்தி கொடுத்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி: பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் பாராட்டு.
புதுக்கோட்டை,நவ.29: தனது ஊரில் தான் படித்த அரசுப்பள்ளியில் தனது சொந்த பணம் ரூ 2 இலட்சம் செலவில் ஸ்மார்ட் வகுப்பறை மற்றும் ஸ்மார்ட் டிவி ஏற்படுத்தி கொடுத்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தியை பொதுமக்கள்,சமூக ஆர்வலர்கள் பாராட்டி வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் ,கந்தர்வக்கோட்டை ஒன்றியத்தில் வளவம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது.இப்பள்ளியில் பயின்று தற்பொழுது மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக பணிபுரிந்து வருபவர் சாமி.சத்தியமூர்த்தி.இவர் தான் பயின்ற வளவம்பட்டி ஊராட்சி ஒன்றியநடுநிலைப்பளிக்கு ஏதாவது செய்ய வேண்டும் என எண்ணினார்.அந்த வகையில் அப்பள்ளிக்கு தனது சொந்த பணம் ரூ 2 இலட்சம் கொண்டு ஸ்மார்ட் வகுப்பறை மற்றும் ஸ்மார்ட் டிவி கொண்ட அறையை ஏற்படுத்தினர்.தற்பொழுது அதற்கான திறப்பு விழா கந்தர்வக் கோட்டை சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னத்துரை தலைமையில் நடைபெற்றது.
கந்தர்வக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னத்துரை ஸ்மார்ட் வகுப்பறையை திறந்து வைத்து ஸ்மார்ட் வகுப்பறை அமைய காரணமாக இருந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தியை பாராட்டிப் பேசினார்.பின்னர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி ஸ்மார்ட் டிவி உள்ள வகுப்பறையை திறந்து வைத்தார்.
பின்னர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி பேசியதாவது: என்னை ஆளாக்கின பள்ளிக்கு நான் செய்கிற கடமையாக இதை நினைக்கிறேன்.இந்த பள்ளிக் கூடத்தில் படித்து தான் நான் இன்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக வந்து நிற்கிறேன்.அந்த நன்றிக் கடன் தான்..நான் படிச்ச பள்ளிக் கூடத்துக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை உண்டாக்கியது..நானும் பல அரசுப் பள்ளிகளை பார்வையிடுகிறேன்..அங்குள்ள ஊர்ப்பொது மக்களாலும்,முன்னாள் மாணவர்களாலும் ,சமூக ஆர்வலர்களாலும் அப்பள்ளி முன்னேற்றம் அடைந்ததை காண்கிறேன்..அவ்வாறு காணும் நமது ஊர் பள்ளியிலும் நாம் மாற்றத்தை உருவாக்க வேண்டும் என எண்ணிணேன்.அதற்காக எனது சொந்த பணம் ரூ 2 இலட்சத்தில் ஸ்மார்ட் வகுப்பறையை ஏற்படுத்தி உள்ளேன்.இப்பள்ளி மேன்மேலும் உயர இன்னும் பல உதவிகள் செய்வேன்.இப்பள்ளி மட்டுமல்ல புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் உதவிகள் செய்வேன் என்றார்.
முன்னதாக ஊர்ப்பொதுமக்கள் கந்தர்வக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் சின்னத்துரையிடம் வளவம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியை உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
விழாவில் புதுக்கோட்டை மாவட்டக் கல்வி அலுவலர் மஞ்சுளா,பள்ளித்துணை ஆய்வாளர் குரு.மாரிமுத்து,வட்டாரக் கல்வி அலுவலர்கள் பொன்னழகு,மகேஸவரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
விழாவில் ஒன்றியக்குழுத்துணைத்தலைவர் கே.மாதவன்,ஊராட்சி மன்றத்தலைவர் பாமா பாலமுருகன்,பள்ளி மேலாண்மைக் குழுத்தலைவர் லட்சுமி முத்துக்குமார்,பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் கோவிந்தராசு,ஊராட்சி மன்றத்துணைத்தலைவர் ராதா முனியாண்டி,வழக்கறிஞர்கள் பாலமுருகன்,சரவணன் மற்றும் முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர்கள்,துணைத்தலைவர்கள்,அரசியல் பிரமுகர்கள்,சமூக ஆர்வலர்கள்,பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தான் படித்த அரசு பள்ளிக்கு தனது சொந்த பணம் ரூ 2 இலட்சத்தில் ஸ்மார்ட் வகுப்பறை ஏற்படுத்திய மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தியை அப்பகுதி பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் பாராட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.