இந்தியாவின் பெருமைமிகு மாணிக்கம்: பகவான் பிர்சா முண்டா

இந்திய விடுதலையின் பவளவிழாவை இந்தியா கொண்டாடிக் கொண்டிருக்கும் இத்தருணத்தில் அடக்குமுறைகள் நிரம்பிய பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக தாய்நாட்டின் விடுதலைக்காகத் துணிவோடு போராடிய வீரர்களின் வரிசையில் பகவான் பிர்சா முண்டாவின் பெயர் மட்டும் உயர்ந்து நிற்கிறது. பிர்சா முண்டா மிகக் குறுகிய காலத்திற்கு மட்டுமே வாழ்ந்தார் எனினும் அவரது வாழ்க்கை துணிவு மிக்க ஒன்றாகும். அவரது தீரமிக்க செயல்களும் புனிதமான நற்செயல்களும் எண்ணற்றவர்களை அவரைப் பின்பற்றுவோராக மாற்றின.

1875ஆம் ஆண்டு நவம்பர் 15 அன்று இன்றைய ஜார்க்கண்ட் பகுதியில் உள்ள உளிஹாட்டு என்ற கிராமத்தில் முண்டா பழங்குடி இனத்தைச் சேர்ந்த குடும்பம் ஒன்றில் பிறந்த பிர்சா, கடுமையான வறுமையுடனேயே தனது குழந்தைப் பருவத்தைக் கழித்தார். இயற்கையோடும், இயற்கை தரும் ஆதாரவளங்களோடும் ஒன்றியைந்து வாழ்ந்து கொண்டிருந்த பழங்குடிகள் வசிக்கும் மத்திய மற்றும் கிழக்குப் பகுதி இந்தியாவின் அடர்ந்த காடுகளிலும் பிரிட்டிஷ் ஆட்சி தனது சுரண்டலை நீடிக்கத் தொடங்கிய நேரம் அது. காட்டுப் பகுதிகளுக்கு அந்நியரான கந்துவட்டிக்காரர்கள், ஒப்பந்தக்காரர்கள், நிலப்பிரபுக்கள் ஆகியோரை பிரிட்டிஷ் ஆட்சி காடுகளுக்குள் அழைத்து வந்தது. அதே நேரத்தில் பிரிட்டிஷ் ஆட்சியின் தீவிரமான உதவியோடு கிறித்துவ மதப் பிரச்சாரகர்கள் இந்தப் பகுதிகளில் இடைவிடாது செயல்பட்டு வந்ததோடு, காடுகளில் வசிக்கும் பழங்குடிகளின் மத-கலாச்சார நெறிகளை அவமதிக்கும் வகையில் அவர்கள் தலையீடும் செய்து வந்தனர்.

1880களில் பிரிட்டிஷ் ஆட்சி வனப்பகுதிகளில் அறிமுகப்படுத்திய ஜமீன்தாரி முறை பழங்குடியினரை அந்த நிலத்தின் உரிமையாளர்கள் என்பதிலிருந்து அந்த நிலங்களில் உழைக்கும் உழைப்பாளிகள் என்ற வகையில் மாற்றியது. இவை அனைத்துமே பழங்குடியினரின் நலனுக்காகப் போராட வேண்டும் என்ற உணர்வை பிர்சாவிடம் உருவாக்கியது. மத ரீதியான விஷயங்களில் சக பழங்குடியினரிடையே அவர் புதியதொரு வெளிச்சத்தைப் பாய்ச்சினார். அதே நேரத்தில், பழங்குடியினர் பின்பற்றி வந்த பல்வேறு மதச் சடங்குகளை சீரமைத்து, அவர்களிடையே நிலவிய மூட நம்பிக்கைகள் நிரம்பிய பல சடங்குகளை தவிர்க்குமாறு செய்தும், புதிய கருத்துக்களையும், புதிய துதிகளையும் அறிமுகம் செய்தும், பழங்குடிகளின் பல பழக்க வழக்கங்களை சீர்திருத்தியும், பழங்குடியினப் பெருமையை மீட்டெடுத்து உயிர்ப்பிக்க தீவிரமாகச் செயல்பட்டார். இவ்வகையில் மகத்தானதொரு மக்கள் தலைவராக பிர்சா உருவெடுத்தார். அவரைப் பின்பற்றியவர்கள் பகவான், தாரதி அபா என்றும் அவரை அழைக்கத் தொடங்கினர்.

மக்களின் அபிமானத்தைப் பெற்ற அவர், மிக விரைவிலேயே பிரிட்டிஷ் காவலர்களால் பிடிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சிறையிலேயே அவர் 1900 ஜனவரி 9 அன்று உயிர்நீத்தார். எனினும் பகவான் பிர்சா முண்டாவின் உயிர்த்துடிப்பு மிக்க போராட்டம் வீணாகவில்லை. பழங்குடிகளின் மோசமான நிலை குறித்தும், அவர்கள் மீது நடத்தப்படும் குரூரமான சுரண்டல் குறித்தும் பிரிட்டிஷ் ஆட்சி உணர வேண்டிய கட்டாயத்தையும் அவரது போராட்டம் ஏற்படுத்தியது. இதன் விளைவாகவே, பழங்குடிகளைப் பாதுகாக்கும் வகையில் ‘1908ஆம் ஆண்டின் சோட்டா நாக்பூர் குத்தகை சட்டம்’ பிரிட்டிஷ் அரசால் கொண்டு வரப்பட்டது. மிக முக்கியமான இந்த சட்டம் பழங்குடிகளின் நிலத்தை பழங்குடியல்லாத பிரிவினருக்கு கைமாற்றுவதை தடை செய்ததோடு, பழங்குடியினருக்கு மிகப்பெரும் நிவாரணத்தையும் கொண்டு வந்தது. இதன் மூலம் பழங்குடியினரது உரிமைகளைப் பாதுகாக்கும் தனிச்சிறப்புமிக்கதொரு சட்டமாகவும் அது மாறியது.

அவர் மறைந்து 121 ஆண்டுகள் கழிந்த பின்பும் கூட பகவான் பிர்சா முண்டா இன்றும் தொடர்ந்து லட்சோப லட்சக் கணக்கான இந்தியர்களுக்கு உத்வேகமூட்டுபவராகவே இருந்து வருகிறார்.

நமது விடுதலை இயக்கத்தின் மிகப் பெரும் அடையாளங்களில் ஒருவராக பகவான் பிர்சா முண்டா திகழ்கிறார். பல்வேறு பழங்குடி இனத்தவரும் இந்தியாவின் விடுதலைக்கான போராட்டத்தை வலுப்படுத்தியுள்ளனர். ஏதோ சில காரணங்களால், நமது புகழ்பெற்ற வரலாற்று ஆசிரியர்கள் இந்தியாவின் விடுதலைப் போராட்டத்தில் இந்தப் பழங்குடிகளின் மகத்தான பங்களிப்பிற்கு முறையான இடமளிக்கவில்லை.

எனினும் விடுதலைப் போராட்டத்தின் மாமணிகளைப் போற்றும் மாபெரும் திருவிழாவினை கொண்டாட வேண்டுமென நமது தொலைநோக்கு மிக்க பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அனைத்து இந்தியர்களையும் கேட்டுக் கொண்டுள்ளதோடு, இந்தியாவின் விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்ற போதிலும் உரிய இடம்பெறாத வீரர்களின் துணிவையும் தியாகத்தையும் ஆய்வு செய்யவும் புரிந்து கொள்ளவும் வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார். அவரது திறமைமிக்க தலைமையின்கீழ், பகவான் பிர்சா முண்டாவின் பிறந்த தினமான நவம்பர் 15 அன்று ஒவ்வொரு ஆண்டும் பழங்குடி மக்கள் இனப் பெருமையை கொண்டாடும் விழாவினை கொண்டாடுவதன் மூலம் முதன்முறையாக பழங்குடியினரின் பெருமையும் பங்களிப்பும் முறையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

பழங்குடி மக்களின் இனப் பெருமைக்கான இந்த விழா நாளில் துணிவு, விருந்தோம்பல், தேசியப் பெருமிதம் ஆகிய இந்திய மதிப்பீடுகளை

வளர்த்தெடுப்பதிலும் அதன் கலாச்சாரப் பாரம்பரியத்தைப் பாதுகாப்பதிலும் இந்தியாவின் பழங்குடி மக்கள் எடுத்து வந்துள்ள முயற்சிகளை அங்கீகரித்து நாம் நினைவு கூர்வோமாக!

எழுதியவர்:

டாக்டர். எல். முருகன்
இணையமைச்சர்,
தகவல் ஒலிபரப்பு மற்றும்
மீன்வளம், கால்நடை வளர்ப்பு, பால்பண்ணை துறைகள்

 

By V.BALAMURUGAN 9381811222

Arasumalar.com Amtv.asia Arjunatv.in மக்கள் வெளிச்சம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *