உத்ராகண்ட் கலாச்சாரமும் & பாரம்பரியமும்
(டாக்டர். நாகேந்திர ராவத் & பேராசிரிய டாக்டர் ப்ரோஹித்)
வரலாறு மற்றும் தொல்லியல் துறை
நாட்டுப்புற & கலாச்சாரத் துறை
ஹேமாவதி நந்தன் பகுகுணா கார்வால் பல்கலைக்கழகம்
உத்ராகண்ட் மாநிலம் தனித்துவமான நிலப்பரப்பைக் கொண்டுள்ளது. உயர் சுற்றுச்சூழல், கலாச்சார, மத, ஆன்மீக விழுமியங்கள், வளமான பல்லுயிர், தொன்மங்கள், நாட்டுப்புறக் கதைகள், சமூக-மத நடைமுறைகள், கோயில்கள், புனிதத் தலங்கள், பனி மூடிய மலைகள், அடர்ந்த காடுகள், இங்கு காணப்படும் அரிய வகை தாவர இனங்கள் சுற்றுலாப் பயணிகளையும், பறவை ஆர்வலர்களையும், மலையேறுபவர்கள் மற்றும் யாத்ரீகர்களுக்கு சொர்க்க பூமியாக காட்சியளிக்கிறது. பெரும்பாலும், சிவன், விஷ்ணு மற்றும் சக்தி (தாய் தெய்வம்) ஆகிய தெய்ங்களை இப்பகுதியில் வழிபடுகிறார்கள்; இப்பகுதியின் புனித யாத்திரை / தீர்த்தயாத்திரைகள் வரலாற்று, உயிர்-இயற்பியல், சமூக-கலாச்சார மற்றும் பொருளாதார முன்னோக்குகளை உருவாக்க உதவியது மட்டுமல்லாமல், இமயமலை நிலப்பரப்புகளைப் பற்றிய விரிவான புரிதலுக்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளது.
இப்பகுதியின் அழகு ஸ்கந்த புராணத்திலும் புகழப்பட்டிருப்பதுடன், அமைதியான சூழலில் கடவுள்கள் இருப்பதை வேதங்கள் விவரிக்கின்றன. ஹரித்வார், கங்கோத்ரி, யமுனோத்ரி, பத்ரிநாத், கேதார்நாத் ஆகிய இடங்களுக்குச் செல்ல நுழை வாயிலாகஇப்பகுதி இருந்து வருகிறது, காலங்காலமாக யாத்ரீகர்கள் வந்து செல்லும் இவ்விடங்களுக்கு சங்கராச்சாரியார் கி.பி 8 ஆம் நூற்றாண்டில் வருகை புரிந்துள்ளார். லார்ட் கர்சன், அட்கின்சன், டில்மன் போன்ற வெளிநாட்டவர்களும் மலையேற்றம் செய்து இந்தப் பகுதியில் புதிய மலையேற்றப் பாதைகளைக் கண்டறிந்தனர்.
கர்வால் ஹிமாலயா அதன் இயற்கை அழகுக்கு மட்டுமல்ல, அதன் கலாச்சார சிறப்பிற்கும் நன்கு அறியப்பட்டதாகும். ராமாயணம் மற்றும் மகாபாரதம் ஆகிய மாபெரும் இந்திய இதிகாசங்களில் கர்வால் இமயமலையின் இயற்பியல் முக்கியத்துவத்தை மட்டுமல்ல, அதன் மத மற்றும் சடங்கு மரபுகளையும் எடுத்துக்காட்டும் போதுமான குறிப்புகள் உள்ளன. இப்பகுதியின் பல இடங்கள் விஷ்ணு, சிவன், தேவி கங்கை
மற்றும் யமுனை ஆகிய பிராமண தெய்வங்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளதுடன், பள்ளத்தாக்குகளில் வழிபடப்படும் பல நாட்டுப்புற தெய்வங்கள் கர்வால் இமயமலைக்கு ‘தேவ் பூமி’ என்ற அடையாளத்தை அளிக்கிறது.
கர்வாலில், பழங்குடி கலாச்சாரம் மரபுகள், மொழி, பேச்சுவழக்கு, நியாயம், பண்டிகைகள், பழக்கவழக்கங்கள், நம்பிக்கைகள், சடங்குகள், மதிப்புகள், உணவுப் பழக்கங்கள், உடைகள், ஆபரணங்கள், கலைகள் ஆகியவற்றை பின்பற்றும் பல்வேறு இனக்குழுக்களைச் சேர்ந்தவர்கள் வசிக்கின்றனர். பிரபலமான பாரம்பரிய நாட்டுப்புறப் பாடல்களும், நடனங்களும், சடங்குகளும், யாத்ரீகர்களுக்கு சுவராஸ்யங்களை குறைவின்றி நல்குகின்றன. இயற்கையை வணங்குவதைத் தவிர, இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்திகளையும் வணங்குகிறார்கள். மனிதர்கள் தெய்வங்களாக நடனமாடி பக்தர்களை ஆசீர்வதிக்கும் பழக்கம் ஜாகர்நிர்த்யா என்று அழைக்கப்படுகிறது. பாண்டவ நடனமும், ராம்லீலாவும் 2000க்கும் மேற்பட்ட கிராமங்களில் நடத்தப்படுகிறது ரம்மன் நடனம் (மேல் அலக்நாடா பள்ளத்தாக்கின் முகமூடி நடனம்) யுனெஸ்கோவால் அபூர்வமான உலக பாரம்பரியமாக பட்டியலிடப்பட்டுள்ளது.
கலாச்சார நடைமுறைகளின் சூழலியலையும் நம்பிக்கை முறைகள் தீர்மானிக்கின்றன. ஆரம்பத்தில் சைவ மற்றும் சாக்த வழிபாட்டு முறையும் காலப்போக்கில் கிருஷ்ணர் வழிபாட்டு முறையும், வாழ்வியலில் ஆதிக்கம் செலுத்த, ஆதிசங்கராச்சாரியாரின் பிரவேசம், பத்ரிநாத்தில் விஷ்ணுவின் திருவுருவத்தை மீட்டெடுத்து மீண்டும் பிரதிஷ்டை செய்து வைஷ்ணவ வழிபாட்டு முறையும் இணைந்து கொண்டது. தெய்வங்கள் பஞ்ச பூதங்களான இயற்கையின் பூமி, நெருப்பு, நீர், வானம் மற்றும் காற்று ஆகியவற்றுடன் தொடர்புடையவை. தெய்வ வழிபாடுகளின் பாரம்பரியம் வெறுமனே மதம் சார்ந்தது மட்டுமல்ல, குறிப்பிட்ட அரசியல் மதிப்பையும் கொண்டுள்ளது.
கர்வால் இமயமலையில் உள்ள நூற்றுக்கணக்கான நகரும் தெய்வங்கள் பருவகாலத்திற்கு ஏற்ப தங்கள் இருப்பிடத்தை மாற்றிக்கொள்கின்றனர். அப்படி மாறும் போது ஊர்வலமாக செல்வது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.
யமுனா பள்ளத்தாக்கின் அடையாளமான தனித்துவமாக விளங்கும், பூகம்பத்தை எதிர்க்கும் வீடுகளின் கட்டிடக்கலை 5000 ஆண்டுகள் பழமையானவை என்று பல்கலைக்கழகத்தின் தொல்லியல் துறை தெரிவித்துள்ளது.