புளியந்தோப்பு பகுதியில் 4 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த நபருக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு.
சென்னை பெருநகர காவல், புளியந்தோப்பு காவல் மாவட்டத்தில் வசிக்கும் பெற்றோரின் 4 வயது மகளை, கடந்த 13.04.2018 அன்று அதே பகுதியைச் சேர்ந்த பாலசந்திரன் (எ) பிரவீன், வயது.18/2018 என்பவர் மேற்படி 4 வயது சிறுமியை தனியாக அழைத்து சென்று பாலியல் துன்புறுத்தல் கொடுத்துள்ளார். இது குறித்து சிறுமியின் தாய் W-16 புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின்பேரில் உரிய விசாரணை மேற்கொண்டு போக்சோ சட்டப்பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, எதிரி பாலசந்திரன் (எ) பிரவீன் கடந்த 17.04.2018 அன்று, கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டார்.
இவ்வழக்கு தொடர்பான விசாரணை சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், W-16 புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் முறையாக சாட்சிகளை ஆஜர்படுத்தி, வழக்கு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக கண்காணித்து நீதிமன்ற நடவடிக்கைகளின்படி வழக்கு விசாரணை முடிவடைந்து இன்று (22.10.2021) இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது.
மேற்படி வழக்கில் எதிரி பாலசந்திரன் (எ) பிரவீன் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதால், குற்றவாளி பாலசந்திரன் (எ) பிரவீன், வ/21, த/பெ.கஜேந்திரன், கொசப்பேட்டை, சென்னை என்பவருக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூ.10,000/- அபராதமும், அபராதம் கட்ட தவறினால் மேலும் 3 மாதங்கள் சிறைதண்டனை அனுபவிக்க வேண்டும் என, கனம் போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி அவர்கள் தீர்ப்பு வழங்கினார். அதன்பேரில் குற்றவாளி பாலசந்திரன் (எ) பிரவீன் சிறையில் அடைக்கப்பட்டார்.
மேற்படி வழக்கில் சிறப்பாக புலனாய்வு செய்து, நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தி குற்றவாளிக்கு உரிய தண்டனை பெற்று தந்த W-16 புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் நீதிமன்ற அலுவல் பணிபுரியும் காவல் குழுவினரை சென்னை பெருநகர காவல் உயரதிகாரிகள் வெகுவாகப் பாராட்டினர்.