அண்ணாசதுக்கம் பகுதியில் கடந்த 2007ம் ஆண்டு ஏ.டி.எம் காவலாளி கொலை வழக்கில் குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு.
செங்கல்பட்டு மாவட்டம், வேடந்தாங்கல், சித்திரைகுளம் பகுதியில் வசித்து வந்த ரவி, வ/42, த/பெ.பாப்பா ரெட்டியார் என்பவர் சென்னை, எழிலகம் பகுதியில் உள்ள தனியார் வங்கி ஏ.டி.எம் மையத்தில் காவலாளியாக பணிபுரிந்து வந்தார். கடந்த 18.08.2007 அன்று அதிகாலை பணியிலிருந்த போது, அங்கு பணம் எடுக்க வந்த வெளிமாநிலத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் மேற்படி ஏ.டி.எம் இயந்திரத்தில் பணம் எடுத்த போது, பணம் வராததால் ஆத்திரமடைந்து ஏ.டி.எம் இயந்திரத்தை சேதப்படுத்த முயன்றுள்ளார். இதனை பார்த்த காவலாளி ரவி தட்டிக்கேட்ட போது, ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரமடைந்த வெளிமாநில வாலிபர் காவலாளி ரவியை கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பியுள்ளார். இது குறித்து D-6 அண்ணாசதுக்கம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்ததில் மேற்படி கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட டைய்த்தோவோலி ராகோ, வ/26, வெனிசா ராகோ, கோகிமா, நாகலாந்து மாநிலம் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இவ்வழக்கு தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள 5வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், D-6 அண்ணா சதுக்கம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் முறையாக சாட்சிகளை ஆஜர்படுத்தியும், குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தும், வழக்கு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக கண்காணித்து வந்த நிலையில், நீதிமன்ற நடவடிக்கைகளின் படி வழக்கு விசாரணை முடிவடைந்து இன்று (22.10.2021) இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது.
இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட எதிரி டைய்த்தோவோலி ராகோ மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதால், டைய்த்தோவோலி ராகோவுக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து கனம் 5வது கூடுதல்அமர்வு நீதிமன்ற நீதிபதி அவர்கள் தீர்ப்பு வழங்கினார்.
மேற்படி வழக்கில் சிறப்பாக புலனாய்வு செய்து, நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தி குற்றவாளிக்கு உரிய தண்டனை பெற்று தந்த D-6 அண்ணாசதுக்கம் காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் நீதிமன்ற அலுவல் பணிபுரியும் காவல் குழுவினரை, காவல் உயரதிகாரிகள் வெகுவாக பாராட்டினர்.