சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் சிறப்பாக பணிபுரிந்து குற்றவாளிகளை கைது செய்த மதுரவாயல், ஐஸ் அவுஸ் மற்றும் செம்மஞ்சேரி காவல் நிலைய அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.
மதுரவாயல் பகுதியில் காரில் கஞ்சா கடத்தி வந்த 2 நபர்கள் கைது. 185 கிலோ கஞ்சா,1 கார் மற்றும் 2 செல்போன்கள் பறிமுதல்
சென்னை பெருநகரில் “போதை பொருள் தடுப்புக்கான நடவடிக்கை” (Drive against Drugs) மூலம் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் உத்தரவிட்டதின்பேரில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் தீவிரமாக கண்காணித்து, கஞ்சா மற்றும் போதை பொருட்கள் வைத்திருப்பவர்கள், கடத்தி வருபவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக, 27.09.2021 அன்று காலை சுமார் 08.30 மணியளவில், செங்குன்றம் முதல் தாம்பரம் செல்லும் பைபாஸ் சாலையில், தாம்பரம் நோக்கி ஆந்திர மாநில பதிவெண் கொண்ட சிகப்பு நிற கார் ஒன்று அதிவேகமாக செல்வதாக கிடைத்த தகவலின்பேரில், T-4 மதுரவாயல் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.M.ஜெகநாதன், போக்குவரத்து காவல் தலைமைக் காவலர்கள் திரு.ஜேம்ஸ் (த.கா.32608) மற்றும் திரு.T.வெங்கடாச்சலம் (த.கா.35311) ஆகியோர் அடங்கிய காவல் குழுவினர் துரத்திச் சென்று மதுரவாயல், ஓடைமாநகர் சுரங்கப்பாதை அருகில் மேற்படி காரை நிறுத்தியபோது, காரில் இருந்த 2 நபர்களும் தப்பியோடியவே, காவல் குழுவினர் துரத்திச் சென்று 2 நபர்களை பிடித்து காரை சோதனை செய்தபோது, அதில் பெருமளவு கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
அதன்பேரில், காரில் கஞ்சா கடத்தி வந்த 1.பெரியகருப்பன், வ/39, த/பெ.சின்னமாயாவு, பேரையூர் தாலுக்கா, மதுரை மாவட்டம், 2.புதுராஜா, வ/25, த/பெ.சந்திரன், தெற்கு தெரு, பேரையூர் தாலுக்கா, மதுரை மாவட்டம் ஆகிய 2 நபர்களை கைது செய்தனர். மேலும், காரிலிருந்த 185 கிலோ எடை கொண்ட கஞ்சா, 2 செல்போன்கள் மற்றும் குற்றச் செயலுக்கு பயன்படுத்திய மேற்படி1 கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
ஐஸ் அவுஸ் பகுதியில் இரவு ரூ.2 லட்சம் மதிப்புடைய இருசக்கர வாகனத்தை திருடிய குற்றவாளி சுமார்1 மணி நேரத்தில் கைது. இருசக்கர வாகனம் பறிமுதல்.
சென்னை, திருவல்லிக்கேணியைச் சேர்ந்த ராஜ்குமார், வ/39 என்பவர் 09.10.2021 அன்று இரவு சுமார் 10:30 மணியளவில், டாக்டர் நடேசன் சாலையில் உள்ள அவரது நண்பரின் கடைக்கு சென்றபோது, சுமார் 2 லட்சம் மதிப்புள்ள அவருடைய TN23 BQ 6376 என்ற பதிவெண் கொண்ட கரிஷ்மா இருசக்கர வாகனத்தை கடைக்கு வெளியே நிறுத்திவிட்டு, கடைக்குள் சென்று சுமார் ½ மணி நேரம் கழித்து வந்து பார்த்தபோது, அவரது இருசக்கர வாகனம் திருடு போயிருந்தது. இது குறித்து ராஜ்குமார், காவல் கட்டுப்பாட்டறைக்கு தகவல் கொடுத்ததின்பேரில், இரவு பணியிலிருந்த D-3 ஐஸ் அவுஸ் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.A.சிவகுமார் மற்றும் செக்டார் பணியிலிருந்த முதல்நிலைக் காவலர் திரு.M.பார்த்திபன் (மு.நி.கா.44515) ஆகியோர் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, சுமார் 11.45 மணியளவில்,
லாயிட்ஸ் காலனி அருகே மேற்படி இருசக்கர வாகனத்துடன் தப்ப முயன்ற நபரை பிடித்து விசாரணை செய்தனர்.
விசாரணையில் பிடிபட்ட நபர் கார்த்திக் (எ) கரிமுல்லா, வ/31, த/பெ.குமார், மெக்காபுரம், இராயப்பேட்டை என்பதும், சற்று முன்பு டாக்டர் நடேசன் சாலையில் நிறுத்தியிருந்த ராஜ்குமாரின் விலையுயர்ந்த கரிஷ்மா இருசக்கர வாகனத்தை திருடிக் கொண்டு வந்ததும் தெரியவந்தது.
அதன்பேரில், எதிரி கார்த்திக் (எ) கரிமுல்லா என்பவர் கைது செய்யப்பட்டு, அவரிடமிருந்து புகார்தாரரின் விலையுயர்ந்த இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
ஐஸ் அவுஸ் பகுதியில் வாகன சோதனையின்போது, திருட்டு இருசக்கர வாகனத்தில் வந்த குற்றவாளியை பிடித்த காவலர்கள்.
சென்னை பெருநகர காவல், D-3 ஐஸ் அவுஸ் காவல் நிலைய காவலர்கள் திரு. M.குமார் (கா.56005) மற்றும் திரு. M.புருஷோத்தமன் (கா.52758) ஆகிய இருவரும் கடந்த 03.10.2021 அன்று இரவு சுமார் 11.30 மணியளவில், ஐஸ் அவுஸ், மசூதி அருகே வாகன தணிக்கையில் இருந்தபோது, டியோ இருசக்கர வாகனத்தில் வந்த 3 நபர்களை நிறுத்தியபோது, மூவரும் இருசக்கர வாகனத்தை போட்டு விட்டு தப்பியபோது, காவலர்கள் துரத்திச் சென்று ஒரு நபரை பிடித்து விசாரணை செய்தனர்.
விசாரணையில் பிடிபட்ட நபர் பிரதீப், வ/23, த/பெ.ஐயப்பன், பாரதியார் தெரு, தேவர் நகர், பாடி என்பதும், பிரதீப் அவரது நண்பர்களுடன் சேர்ந்து, T-10 திருமுல்லைவாயல் காவல் நிலைய எல்லையில் மேற்படி டியோ இருசக்கர வாகனத்தை திருடியதும், பின்னர் இருசக்கர வாகனத்தின் பதிவெண்ணை மாற்றியமைத்து, வழிப்பறி குற்றங்களில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
அதன்பேரில், எதிரி பிரதீப்பை D-3 ஐஸ் அவுஸ் காவல் நிலையத்தில் ஒப்படைத்ததின்பேரில், வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். அவரிடமிருந்து மேற்படி டியோ இருசக்கர வாகனம், பணம் ரூ.200/- மற்றும் 1 செல்போன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
செம்மஞ்சேரி பகுதியில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளை கவரும் வகையில் வித்தியாசமான சமிக்ஞைகளுடன் போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் பணி செய்து வரும் போக்குவரத்து சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.குமார்.
சென்னை பெருநகர காவல், J-10 செம்மஞ்சேரி போக்குவரத்து காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் திரு. M.குமார் என்பவர் போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் பணியில், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளை கவரும் வகையில் வித்தியாசமான சமிக்ஞைகளுடன் வாகனங்களை நிறுத்தியும், அனுப்பி வைத்தும் கலகலப்பாக பணி செய்து வருகிறார். இதனால் அப்பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகள் சிறப்பு உதவி ஆய்வாளர் குமாரின் செய்கைகளை கண்டு சிரித்த முகத்துடனும், மகிழ்ச்சியுடனும் சென்ற வண்ணம் கவர்ந்துள்ளார். மேலும், சிறுவர், சிறுமியர், வயதான நபர்கள் சாலையை கடக்க உதவும்போது, சிரித்த முகத்துடன் பேசி, சாலையை கடக்க உதவுகிறார். 48 வயதிலும் சுறுசுறுப்புடன் செயல்பட்டு, நடனத்துடன் உற்சாகமாக போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் பணிகளை செய்யும் இவரது செயல்களை கண்டு வாகன ஓட்டிகள் தங்களது செல்போன்களில் படம் பிடித்தும், வீடியோக்கள் எடுத்தும், சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்து புகழ்ந்து வருகின்றனர். அப்பகுதியில் உள்ள கல்லூரிகள், பள்ளிகள் மற்றும் தனியார் நிறுவனங்களில் போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் குறித்து சிறப்பு உதவி ஆய்வாளர் குமார், காவல்துறை மற்றும் போக்குவரத்து காவல் பணிகள் குறித்து சிறப்புரையாற்றியுள்ளார்.
சிரித்த முகத்துடன் வித்தியாசமான முறையில் போக்குவரத்து பணி செய்யும் இவரது செயலை அறிந்த காவல்துறை தலைமை இயக்குநர் திரு.சி.சைலேந்திர பாபு, இ.கா.ப., அவர்கள் சிறப்பு உதவி ஆய்வாளர் குமாரை நேரில் அழைத்துப் பாராட்டி, பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.
சுமார் 15 வருடங்களாக போக்குவரத்து காவல் பணியில் மகிழ்ச்சியுடனும், சுறுசுறுப்புடனும், வாகன ஓட்டிகளை கவரும் விதத்தில் உற்சாகத்துடனும் பணி செய்து வருவது மன மகிழ்ச்சியை தருவதாகவும், மகிழ்ச்சியாக இருப்பதும், உயிரோடு இருக்கையில் நன்மை செய்வதுமே அல்லாமல் வேறு நன்மையில்லை என சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.குமார் தெரிவித்தார்.
பணியில் விழிப்புடன் செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்த, T-4 மதுரவாயல் மற்றும் D-3 ஐஸ் அவுஸ் காவல் நிலைய அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களையும், வாகன ஓட்டிகள் பாராட்டும் வகையில் பணி செய்து வரும் J-10 செம்மஞ்சேரி போக்குவரத்து காவல்சிறப்பு உதவி ஆய்வாளர் திரு. குமார் ஆகியோரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் இன்று (19.10.2021) நேரில் அழைத்து வெகுமதி மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.