வில்லிவாக்கத்தில் மதுபோதையில் தாயை தாக்கிய அண்ணனை கட்டையால் தாக்கி கொலை செய்த தம்பி கைது.
சென்னை, வில்லிவாக்கம், பலராமபுரம், அறிஞர் அண்ணா தெருவில் தனலட்சுமி, பெ/வ.67, க/பெ.சொக்கலிங்கம் என்பவர் அவரது 3 மகன்களுடன் வசித்து வருகிறார். இதில் மூத்த மகன் சசிகுமார் என்பவர் திருமணமாகி குடும்பத்துடன் மேற்படி வீட்டின் ஒரு பகுதியிலும், 2வது மகன் சிவராஜ், வ/47 என்பவர் திருமணமாகாமல் ஒரு பகுதியிலும், 3வது மகன் பிரகாஷ், வ/44 திருமணமாகி கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்து மற்றொரு பகுதியில் தாயுடனும் வசித்து வருகிறார்.
இந்நிலையில், நேற்று (18.10.2021) இரவு சுமார் 09.30 மணியளவில், சிவராஜ் மதுபோதையில் வீட்டிற்கு சென்று, தாயிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தாக்கியுள்ளார். தாயின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த தம்பி பிரகாஷ் அண்ணன் சிவராஜிடம் ஏன் இவ்வாறு சண்டை போடுகிறாய் என கேட்டுள்ளார். சிவராஜ் தகாத வார்த்தைகளால் பேசியதால், பிரகாஷ் ஆத்திரத்தில் அருகிலிருந்த மரநாற்காலியின் கட்டையை எடுத்து சிவராஜை தாக்கியதில், சிவராஜ் இரத்தக்காயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்துவிடவே, பிரகாஷ் தப்பியோடி தலைமறைவாகிவிட்டார்.
இது குறித்து தகவலறிந்த V-1 வில்லிவாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்துசென்று பிரேதத்தை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, கொலை உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்தனர்.
V-1 வில்லிவாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை மற்றும் தேடுதலில் ஈடுபட்டு, மேற்படி அண்ணனை கொலை செய்து தப்பிய பிரகாஷ், வ/44, த/பெ.சொக்கலிங்கம், அறிஞர் அண்ணா தெரு, பலராமபுரம், வில்லிவாக்கம் என்பவரை இன்று (19.10.2021) கைது செய்தனர்.
விசாரணையில் மதுபோதையில் தாயிடம் தகராறு செய்து தாக்கியதால், பிரகாஷ் அவரது அண்ணன் சிவராஜை மரக்கட்டையால் தாக்கி கொலை செய்தது தெரியவந்தது.
கைது செய்யப்பட்ட பிரகாஷ் விசாரணைக்குப் பின்னர், இன்று (19.10.2021) நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டவுள்ளார் .