சேத்துப்பட்டு பகுதியில் உள்ள தனியார் கெமிக்கல் நிறுவனத்தில் நள்ளிரவு புகுந்து பணத்தை திருடிய பழைய குற்றவாளி கைது. ரூ. 60,70,640/- மற்றும் 1 செல்போன் பறிமுதல்.
சென்னை, சேத்துப்பட்டு, ஹாரிங்டன் ரோடு, எண்.2, என்ற முகவரியில் உள்ள கட்டிடத்தின் 4 வது மாடியில் தனியார் கெமிக்கல் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. கடந்த 10.10.2021 அன்று இரவு மேற்படி தனியார் நிறுவனத்தின் கண்ணாடி கதவை ஸ்குரு டிரைவர் உதவியுடன் திறந்து உள்ளே சென்ற அடையாளம் தெரியாத நபர் அங்கிருந்த ரூ.72 லட்சம் பணத்தை திருடிக்கொண்டு தப்பியுள்ளார். இது குறித்து மேற்படி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் திரு.குமரவேல் என்பவர் G-7 சேத்துப்பட்டு காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்யப்பட்டது.
G-7 சேத்துப்பட்டு காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் சம்பவயிடத்திற்கு சென்று தீவிர விசாரணை செய்தனர். மேலும் சம்பவயிடத்தின் அருகில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து தீவிர விசாரணை செய்ததில், பழைய குற்றவாளி மேற்படி குற்றத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. அதன்பேரில், காவல் குழுவினர் தீவிர விசாரணை மற்றும் தேடுதலில் ஈடுபட்டு, மேற்படி திருட்டுக் குற்றத்தில் ஈடுபட்ட பாண்டுரங்கன், வ/57, த/பெ.வரதராஜன், நடுத்தெரு, பிள்ளையார் நத்தம், திருநெல்வேலி மாவட்டம் என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து பணம் ரூ.60,70,640/- , 1 செல்போன் மற்றும் ஸ்குரு டிரைவர், இரும்பு ராடு ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் விசாரணையில், கைது செய்யப்பட்ட பாண்டுரங்கன் மீது F-2 எழும்பூர் மற்றும் F-3 சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையங்களில் திருட்டு வழக்குகள் உட்பட 14 குற்ற வழக்குகள் உள்ளதும், இவர் ஏற்கனவே ஒரு முறை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதும் தெரியவந்தது.
கைது செய்யப்பட்ட பாண்டுரங்கள் விசாரணைக்குப் பின்னர் நேற்று (14.10.2021) நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.