புதுவண்ணாரப்பேட்டை பகுதியில் வாலிபரை கத்தியால் தாக்கிய நபர் கைது.
சென்னை, புதுவண்ணாரப்பேட்டை, சிவன் நகர் 2வது தெரு, எண்.51 என்ற முகவரியில் அருண் நாராயணன், வ/19, த/பெ.பழனி என்பவர் வசித்து வருகிறார். அருண் நாராயணன் நேற்று (15.10.2021) மதியம் 1.00 மணியளவில் புதுவண்ணாரப்பேட்டை சுனாமி குடியிருப்பு அருகே நின்று கொண்டிருந்த போது, அங்கு வந்த தண்டையார்பேட்டை பகுதியைச் சேர்ந்த நேசமணி என்பவர் அருண் நாராயணணிடம் தகராறு செய்து கத்தியால் கழுத்தில் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளார். காயமடைந்த அருண் நாராயணன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து அருண் நாராயணனின் தந்தை பழனிவேல் என்பவர் H-5 புதுவண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
H-5 புதுவண்ணாரப்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்து மேற்படி கொலை முயற்சி வழக்கில் சம்பந்தப்பட்ட நேசமணி, வ/36, தபெ.அந்தோணி, எண்.375, F-பிளாக், சுனாமி குடியிருப்பு, தண்டையார்பேட்டை, சென்னை என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்த 1 கத்தி பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் விசாரணையில் கைது செய்யப்பட்ட நேசமணியின் மகளுக்கு கடந்த 6 மாதத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் முன்னாள் காதலனான மேற்படி அருண் நாராயணன் என்பவர் நேசமணியின் மகளுடன் சேர்ந்து சுற்றி வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நேசமணி அருண் நாராயணனை கத்தியால் தாக்கி கொலை செய்ய முயன்றது தெரியவந்தது.
விசாரணைக்குப் பின்னர் கைது செய்யப்பட்ட நேசமணி நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.