பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும்
வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மாண்புமிகு நகராட்சி நிர்வாகத்துறை
அமைச்சர் திரு.கே.என்.நேரு அவர்கள் தலைமையில் இன்று (11.10.2021)
நடைபெற்றது.
பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு
வரும் சுகாதாரம், திடக்கழிவு மேலாண்மை, சாலைகள், பாலங்கள் மற்றும் மழைநீர்
வடிகால் போன்ற வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மாண்புமிகு
நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு அவர்கள் தலைமையில் இன்று
(11.10.2021) ரிப்பன் கட்டட கூட்டரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில்
மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர் பாபு
அவர்கள் கலந்து கொண்டு திட்டப்பணிகள் குறித்து ஆலோசனைகளை வழங்கினார்.
கூட்டத்தில் மாண்புமிகு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் அவர்கள்
தெரிவித்ததாவது :
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழக மக்கள் அனைவரையும்
கோவிட் தொற்று நோயிலிருந்து பாதுகாக்கும் வகையில் அனைவருக்கும் தடுப்பூசி
விரைந்து செலுத்தப்பட வேண்டும் என உத்தரவிட்டதன் அடிப்படையில்,
மாநகராட்சியின் சார்பில் ஆரம்ப சுகாதார நிலையங்கள், தடுப்பூசி சிறப்பு முகாம்கள்,
தீவிர தடுப்பூசி சிறப்பு முகாம்கள் ஆகியவற்றின் மூலம் கோவிட் தடுப்பூசிகள்
செலுத்தப்பட்டு வருகிறது.
இதுவரை சென்னை மாநகராட்சியில் அரசு மற்றும் தனியார்
மருத்துவமனைகளின் சார்பில் 70 இலட்சம் நபர்களுக்கு மேல் கோவிட் தடுப்பூசி
செலுத்தப்பட்டுள்ளது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின்
உத்தரவின்படி, நடத்தப்பட்ட 5 தீவிர தடுப்பூசி முகாம்களில் மட்டும் 9,49,885 கோவிட்
தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. மாநகராட்சியின் இந்த சிறப்பான
நடவடிக்கைகளுக்கு எனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும்,
பொதுமக்கள் அனைவருக்கும் 100 சதவீதம் தடுப்பூசியை செலுத்திய முதல்
மாநகராட்சி என்ற நிலையை உருவாக்க தொடர்ந்து சிறப்பாக செயல்பட வேண்டும்
என தெரிவித்தார்.
கொரோனா காலக்கட்டத்தில் அரசு மருத்துவமனைகளும், மாநகராட்சி சுகாதார
நிலையங்களுமே பொதுமக்களுக்கு பெருமளவில் பயன்பட்டன. தற்பொழுது
பெருநகர சென்னை மாநகராட்சியில் 140 ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன.
சென்னை மாநகராட்சி விரிவாக்கம் செய்யப்பட்டு 200 வார்டுகள் உள்ள நிலையில்
ஒரு வார்டிற்கு ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் என்கின்ற அடிப்படையில் ஆரம்ப
சுகாதார நிலையங்களின் எண்ணிக்கையை 200 ஆக உயர்த்த திட்டம் வகுத்து அதனை
விரைந்து செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
தொடர்ந்து, பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட கொடுங்கையூர்
குப்பைக் கொட்டும் வளாகத்தில் உள்ள குப்பைகளை பயோ மைனிங் முறையில்
அகழ்ந்தெடுத்து நிலத்தை மீட்டெடுக்கும் திட்டத்தை தொடங்க தேவையான
நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளவும், நடைபெற்று வரும் பாலப் பணிகளை
விரைந்து முடிக்க உரிய துறைகளுடன் கலந்தாலோசித்து நடவடிக்கை
மேற்கொள்ளவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
பொதுமக்கள் பயன்படுத்த இயலாத உபயோகமற்ற நிலையில் உள்ள
பொதுக்கழிப்பிடங்களை பராமரித்து புதுப்பிக்கவும், மேலும், புதிய கழிப்பறைகளை
அமைக்கவும், விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளில் எல்.இ.டி. தெருவிளக்குகளை
அமைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நிதிநிலை அறிக்கையில்
அறிவித்த கணேசபுரம் சுரங்கப்பாதையின் மேல் புதிய மேம்பாலம், ஸ்ட்ராஹன்ஸ்
சாலை, குக்ஸ் சாலை, பிரிக்ளின் சாலை, கொன்னூர் நெடுஞ்சாலை நான்கு முனை
சந்திப்பில் புதிய மேம்பாலம், தெற்கு உஸ்மான் சாலை-சி.ஐ.டி. நகர் முதல் பிரதான
சாலையில் மேம்பாலம் ஆகிய பணிகளை விரைந்து தொடங்க நடவடிக்கை
மேற்கொள்ள வேண்டும்.
சிங்காரச் சென்னை 2.O திட்டத்தின் கீழ் பாந்தியன் சாலை-காசாமேஜர் சாலை
மேம்பாலம், செனடாப் சாலை-டர்ன்புல்ஸ் சாலை மேம்பாலம் மற்றும் காந்தி மண்டபம்
மேம்பாலம் ஆகியவற்றை அழகுப்படுத்தும் பணிகளை விரைந்து மேற்கொள்ளவும்,
சிங்காரச் சென்னை 2.O திட்டத்தின் கீழ் தற்பொழுது மேற்கொள்ளப்பட உள்ள
36 சாலைகள் மற்றும் 31 நடைபாதைகளை புதுப்பித்தல், பட்டினப்பாக்கம் கடற்கரை
லூப் சாலையில் நவீன மீன் அங்காடி, 9 நீர்நிலைகளை புனரமைத்தல், 10 பள்ளிகளில்
நவீன வகுப்பறைகளுடன் பள்ளிக் கட்டடங்களை மேம்படுத்துதல், 4 மயானங்களை
மேம்படுத்துதல், 3 இடங்களில் பாலங்கள் மற்றும் பாலங்கள் கீழ்ப்பகுதிகளை
அழகுப்படுத்துதல், 42 பூங்காங்களை மேம்படுத்துதல், 18 விளையாட்டுத் திடல்களை
மேம்படுத்துதல், விக்டோரியா பொதுக்கூடத்தை புனரமைத்தல், 142
பொதுக்கழிப்பறைகளை மறுசீரமைத்தல், ரிப்பன் கட்டடத்தை வண்ண விளக்குகளால்
ஒளிரூட்டுதல் போன்ற திட்டப் பணிகளை விரைந்து தொடங்க நடவடிக்கை
மேற்கொள்ளவும் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இக்கூட்டத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல்
தலைமைச் செயலாளர் திரு.சிவ் தாஸ் மீனா, இ.ஆ.ப., அவர்கள், அரசு முதன்மைச்
செயலாளர் / பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் திரு.ககன்தீப் சிங் பேடி,
இ.ஆ.ப., அவர்கள், துணை ஆணையாளர்கள் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இ.ஆ.ப.,
(பணிகள்) அவர்கள், டாக்டர் எஸ்.மனிஷ், இ.ஆ.ப., (சுகாதாரம்) அவர்கள், திருமதி
டி.சினேகா, இ.ஆ.ப., (கல்வி) அவர்கள், திரு. சிம்ரன்ஜீத் சிங் காஹ்லோன், இ.ஆ.ப.,
(தெற்கு வட்டாரம்) அவர்கள், திருமதி ஷரண்யா அரி, இ.ஆ.ப., (மத்திய வட்டாரம்)
அவர்கள், திரு.மா.சிவகுரு பிரபாகரன், இ.ஆ.ப., (வடக்கு வட்டாரம்) அவர்கள்,
தலைமைப் பொறியாளர்கள், மேற்பார்வை பொறியாளர்கள், மாநகர நல அலுவலர்,
மாநகர மருத்துவ அலுவலர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.