இரவு ரோந்து பணியில் விழிப்புடன் செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்த நுங்கம்பாக்கம், குரோம்பேட்டை மற்றும் பழவந்தாங்கல் காவல் நிலைய காவல் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.

 

1. சாத்தங்காடு பகுதியில் கத்தியைக் காட்டி மிரட்டி செல்போன் பறித்துக் கொண்டு தப்பிய 3 குற்றவாளிகளை நுங்கம்பாக்கம் காவல் குழுவினர் கைது செய்தனர். 1 செல்போன், 2 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

F-3 நுங்கம்பாக்கம் காவல் நிலைய காவலர்கள் தாமோதிரன் (கா52866), அஜித் அலி ((கா.52871) மற்றும் அமிர்தபாண்டியன் (கா.49567) ஆகியோர் கடந்த 05.7.2021 அன்று இரவு சுமார் 11.30 மணியளவில், நுங்கம்பாக்கம் பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, அவ்வழியே 2 இருசக்கர வாகனங்களில் வந்த 3 நபர்களை நிறுத்தி விசாரணை செய்தபோது, 3 நபர்களும் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தனர். மேலும் சந்தேகம் அதிகரிக்கவே, அவர்களின் இருசக்கர வாகனத்தை சோதனை செய்தபோது, அதில் 1 கத்தி இருந்தது தெரியவந்தது. அதன்பேரில் பிடிபட்ட நபர்களை F-3 நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் ஒப்படைத்ததின்பேரில், விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

F-3 நுங்கம்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் விசாரணை செய்ததில் பிடிபட்ட நபர்கள், 1.பாலாஜி, வ/19, த/பெ.பாபு, மேட்டு தெரு 3வது சந்து, ராஜாகடை, திருவொற்றியூர், சென்னை, 2.முரளி கிருஷ்ணன், வ/19, த/பெ.செங்கல்வராயன், போஜராஜன் நகர் 2வது தெரு, பழைய வண்ணாரப்பேட்டை, 3. ஒரு 17 வயது இளஞ்சிறார் என்பதும், 3 நபர்களும் சில மணி நேரத்திற்கு முன்பு M-8 சாத்தாங்காடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வெற்றி விநாயகர் நகர் மற்றும் கெனால் ரோடு சந்திப்பு அருகே நடந்து சென்று கொண்டிருந்த அப்துல் அஜிஸ் என்பவரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி அவரது செல்போனை பறித்துக் கொண்டு தப்பியதும் தெரியவந்தது. அதன்பேரில், குற்றவாளிகளிடமிருந்து அப்துல் அஜிஸ் என்பவரின் 1 செல்போன், 2 இருசக்கர வாகனங்கள் (KTM Duke & Dio ) மற்றும் 1 கத்தி பறிமுதல் செய்யப்பட்டது.

விசாரணைக்குப் பின்னர் பிடிபட்ட 3 நபர்களும், பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர வாகனங்கள் மற்றும் கத்தி ஆகியவை M-8 சாத்தாங்காடு காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு, உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது.

2. குரோம்பேட்டை பகுதியில் இரவு கடையின் பூட்டை உடைத்து திருடிய குற்றாளி கைது. 1 லேப்டாப், 3 டேப்லட் மற்றும் 3 கைக்கடிகாரங்கள் பறிமுதல்

சென்னை பெருநகர காவல், S-13 குரோம்பேட்டை காவல் நிலைய தலைமைக் காவலர் ரவிச்சந்திரன் (த.கா.35340) என்பவர் கடந்த 04.7.2021 அன்று இரவு ரோந்து பணியிலிருந்தபோது, அதிகாலை சுமார் 06.00 மணியளவில் (05.7.2021), தாம்பரம் சானிடோரியம் இரயில் நிலையம் அருகில் சந்தேகப்படும்படி இருந்த நபரை விசாரணை செய்தபோது, முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தார். சந்தேகத்தின்பேரில், அவரது பையை சோதனை செய்தபோது, அதில் சிறிய அளவிலான இரும்பு கடப்பாரை மற்றும் எலக்டிரானிக் பொருட்கள் இருந்தது தெரியவந்தது.

அதன்பேரில் பிடிபட்ட நபரை S-13 குரோம்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்து விசாரணை செய்ததில் பிடிபட்ட நபர் பொய்யாமொழி, வ/57, த/பெ.அகஸ்தியர், எண்.19, மருதுபாண்டியர் 2வது தெரு, ஆனையூர், மதுரை என்பதும், நள்ளிரவு, தாம்பரம், சானிடோரியம், GST சாலையிலுள்ள கோவர்த்தனன் என்பவருக்கு சொந்தமான டிராவல்ஸ் நிறுவனத்தின் பூட்டை உடைத்து, லேப்டாப் உள்ளிட்ட எலக்டிரானிக் பொருட்கள் திருடியது தெரியவந்தது.

அதன்பேரில், எதிரி பொய்யாமொழி என்பவர் கைது செய்யப்பட்டு, அவரிடமிருந்து 1 லேப்டாப், 3 டேப்லட், 3 கைக்கடிகாரங்கள் மற்றும் குற்றச் செயலுக்கு பயன்படுத்திய 1 சிறிய கடப்பாரை பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் விசாரணையில் எதிரி பொய்யாமொழி குரோம்பேட்டை பகுதியில் இதே போன்று 2 கடைகளின் பூட்டை உடைத்து பொருட்களை திருடியதும், இவர் மீது ஏற்கனவே தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட காவல் நிலையங்களில் குற்ற வழக்குகள் உள்ளதும் தெரியவந்தது.

3. பழவந்தாங்கல் பகுதியில் குற்றவாளி திருடிக் கொண்டு வந்த இருசக்கர வாகனம் பறிமுதல்.

S-9 பழவந்தாங்கல் காவல் நிலைய தலைமைக் காவலர் சம்பத் (த.கா.36116) என்பவர் கடந்த 04.7.2021 அன்று இரவு ரோந்து பணியிலிருந்தபோது, அதிகாலை சுமார் 03.00 மணியளவில் (05.7.2021), பழவந்தாங்கல், அம்மன் நகரில் ரோந்து சென்றபோது, இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு நபர் காவலரை பார்த்ததும், அவர் ஓட்டி வந்த Splendor இருசக்கர வாகனத்தை கீழே போட்டுவிட்டு ஓடவே, காவலர் சம்பத் அவரை துரத்திச் சென்றபோது அந்த நபர் தப்பிச் சென்றார். அதன்பேரில் தலைமைக் காவலர் சம்பத் கைப்பற்றப்பட்ட இருசக்கர வாகனத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்து, விசாரணை செய்ததில், தப்பியோடிய நபர் ரகுபதி (எ) கபாலி, வ/20, த/பெ.ஆறுமுகம், அம்மன் நகர் 12வது தெரு, திரிசூலம், சென்னை என்பதும், ரகுபதி (எ) கபாலி மேற்படி இருசக்கர வாகனத்தை திருடிக் கொண்டு வரும்போது, காவலரை கண்டதும் இருசக்கர வாகனத்தை தெருவில் போட்டுச் சென்றதும் தெரியவந்தது. மேலும் விசாரணையில் எதிரி ரகுபதி மீது S-9 பழவந்தாங்கல் மற்றும் S-7 மடிப்பாக்கம் காவல் நிலையங்களில் திருட்டு வழக்குகள் உள்ளது தெரியவந்தது.

அதன்பேரில், இருசக்கர வாகனத்தின் பதிவு எண்ணை வைத்து விசாரணை மேற்கொண்டு, எதிரி ரகுபதி (எ) கபாலியை பிடிக்க காவல் குழுவினர் தேடுதலில் ஈடுபட்டுள்ளனர்.

இரவு பணியில் விழிப்புடன் செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்த F-3 நுங்கம்பாக்கம் காவல் நிலைய காவலர்கள் தாமோதிரன் (கா52866), அஜித் அலி ((கா.52871), அமிர்தபாண்டியன் (கா.49567), S-13 குரோம்பேட்டை காவல் நிலைய தலைமைக் காவலர் ரவிச்சந்திரன் (த.கா.35340) மற்றும் S-9 பழவந்தாங்கல் காவல் நிலைய தலைமைக் காவலர் சம்பத் (த.கா.36116) சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் இன்று (06.7.2021) நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.

 

By V.BALAMURUGAN 9381811222

Arasumalar.com Amtv.asia Arjunatv.in மக்கள் வெளிச்சம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home/hyqadrt/public_html/wp-includes/functions.php on line 4613